தம்மம்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய
கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு
ஒன்றே கால் மணி நேரம் ஆசிரியர் உரையாற்றிய நாள்
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் 28.8.1987 அன்று இரவு பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்மம்பட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணிக்காரர்கள் 27.8.1987 மாலை தம்மம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று ‘திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக் கூடாது – அனுமதிக்கக் கூடாது’ என்று சொல்லியும் உள்ளனர். இதனைக் காவல்துறை மறுத்து ‘‘திராவிடர் கழகத்தினர் முறையான அனுமதி பெற்றுத்தான் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள். அவற்றை தடை செய்ய முடியாது’’ என்று கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் அடியாட்களைத் தயார் செய்து கொண்டு வந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின் உள்ளே புகுந்து பொதுமக்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வன்முறை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுக்கூட்ட மேடையைத் ‘தீ’ வைத்து எரித்தனர்.
இதற்கிடையில் ஆத்தூரிலிருந்து கார் மூலம் (எம்.எஸ் எம்.1751) புறப்பட்டு தம்மம்பட்டி பொதுக்கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்தார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. அவருடன் தோழர்கள் நால்வரும் பயணம் செய்தனர்.
6.45 மணிக்கு உடையார்பாளையம் முதன்மைச் சாலையிலுள்ள பாலத்தருகே வந்தபோது ஒரு கும்பல் திடீரென்று அந்த வாகனத்தை சூழ்ந்துகொண்டு கடுமையான ஆயுதங்களாலும், கற்களாலும் தாக்கினார்கள். “அடி! கொல்லு!’’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டுக் கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு குறி வைத்துத் தாக்கினர். “இந்து மதத்தைத் தாக்கிப் பேசுவானுங்கடா! வீரமணியைக் கொல்லுங்கடா!’’ என்று துரத்தியபடியே வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள்.
ஓட்டுநர் வெகு சாமர்த்தியமாக வண்டியைப் பின்னாலே கொண்டு வந்து திருப்பி வெகு விரைவாக தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அன்று ஓட்டுநரின் சாமர்த்தியம்தான் ஆர்.எஸ்.எஸ். காலிகளிடமிருந்து தமிழர் தலைவர் ஆசிரியரை மயிரிழையில் உயிர் தப்பிக்க வைத்தது.
காவல் நிலையத்தில் சேலம் மாவட்ட தி.க. துணைத் தலைவர் ஆத்தூர் முருகேசனும், தம்மம்பட்டியைச் சேர்ந்த தோழர் செயராமனும் புகார் கொடுத்தனர்.
ஊரில் பதட்டநிலையும், பரபரப்பும் ஏற்பட்டது. ‘‘எப்படியும் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத்தான் இந்த ஊரை விட்டுப் புறப்படுவேன். மேடை இல்லாவிட்டாலும் ஒலிபெருக்கி இல்லாவிட்டாலும் பேசி விட்டுத்தான் செல்வேன்’’ என்று உறுதியோடு இருந்து மிகத் திரளாக கூடியிருந்த பொது மக்களிடையே 75 நிமிடம் உரையாற்றிவிட்டு அங்கிருந்து 11.45 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.
இது தமிழர் தலைவர்மீது நடத்தப் பெற்ற மூன்றாவது கொலை வெறித் தாக்குதல்! அதற்குப் பிறகும் பல முறை இப்படியான தாக்குதல்கள் நடத்தப்பட்ட துண்டு. அனைத்தையும் எதிர் கொண்டுதான் அவரது பயணம் தொடர்கிறது!