- கேள்வி: அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற பேச்சாளர்கள் இல்லாத நிலையிலும், தி.மு.க. செல்வாக்குடன் இருக்க என்ன காரணம்?
பதில்: அன்று அவர்கள் அதன் செல்வாக்குக்குக் காரணம். இன்று அது குவித்து வைத்துள்ள செல்வமே அதன் செல்வாக்குக்குக் காரணம்.
பதிலடி: ஆமாம், அவர்கள் குவித்து வைத்திருந்த அறிவுச் செல்வம்தான் காரணம்!.
– – – – –
- கேள்வி: கடந்த 55 ஆண்டு காலமாக பீடுநடை போடும் துக்ளக், சாதித்தது குறைவுதானா ?
பதில்: சிந்திப்பவர்களை உருவாக்குவதைத் தவிர, வேறு எதையும் சாதிக்க நினைக்கவில்லையே துக்ளக்.
பதிலடி: ‘பகுத்தறிவு என்றாலே பித்தலாட்டம்’ என்று சொன்னவர் குருமூர்த்தியின் குருநாதர் திருவாளர் சோ. இவர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர்!
– – – – –
- கேள்வி: ஒரு தலைவரின் வெற்றிக்குக் காரணம் என்ன? வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
பதில்: வெற்றி பெற்றவர்களின் வெற்றிக்குக் காரணம், பணிவு. வீழ்ச்சி அடைந்தவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம், அகம்பாவம். இது தலைவர்களுக்கும் பொருந்தும்.
பதிலடி: ‘கடவுளுக்கு மேலே பிராமணர்கள்’ என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் கூறினாரே – அது ஆணவமா – அடக்கமா?
– – – – –
- கேள்வி: யோக்கியன் எப்போது அயோக்கியனாகிறான். அயோக்கியன் எப்போது யோக்கியனாகிறான்?
பதில்: நல்ல குருவை அடையும் அயோக்கியன் கூட யோக்கியனாகிறான். தவறான நட்பினால் யோக்கியன் கூட அயோக்கியன் ஆகிறான்.
பதிலடி: நல்ல குரு என்றால் அவர்கள் மொழியில் என்ன பொருள்? ‘தீண்டாமை ஷேமகரமானது’ என்ற சொன்னவர் குருமூர்த்தியின் படுக்கையறையிலும் தொங்கும் காஞ்சி சங்கராச்சாரியார் – சக மனிதனை பிறப்பால் வெறுக்கும் குருநாதர் (அ)யோக்கியரா?
– – – – –
- கேள்வி: ஏன் பலருக்கு உங்கள் மீது பொறாமை ?
பதில்: நாம் மற்றவர்களைப் பற்றி பொறாமைப்படு வதை விட, நம்மைப் பற்றி மற்றவர்கள் பொறாமைப் படுவது பெருமை என்று நினைக்கிறேன் நான்.
பதிலடி: தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ள பல கேள்விகளை இவர்களே கற்பித்து எழுதிக் கொள்வார்கள்.
– – – – –
- கேள்வி: கொள்கை, கொள்ளை இதில் எதை நோக்கி தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது?
பதில்: திராவிடக் கொள்கை முடிந்து, திராவிட கொள்ளை அரசியல் என்றோ – 50 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டதே.
பதிலடி: கோயில்களைக் கொள்ளையடித்தவர்கள் யார்? என்பது பற்றி அவாளின் சர்.சி.பி. ராமசாமி அய்யரின் அறிவுரையே சாட்சியம் கூறும்.
– – – – –
- கேள்வி: திராவிட மாடலை திராவிட மாடல் உறுப்பினர்களே, வானளாவப் புகழ்ந்து கொள்வது பற்றி?
பதில்: வேறு யாரும் புகழாத அதை, அவர்களும் புகழவில்லை என்றால் திராவிட மாடல் என்ன ஆகும்?
பதிலடி: திராவிடம் என்றாலே ஆரியத்தின் அடிவயிற்றைக் கலக்கும் – அதனுடைய வெளிப்பாடே இது.
– – – – –
- கேள்வி: படித்தவர்கள் பதவிக்கு வந்தால் நல்லாட்சி நடக்குமா?
பதில்: காமராஜ் போல் படிக்காத நல்லவர்கள் வந்தாலும் நல்லாட்சி நடக்குமே.
பதிலடி: அதே காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆன போது – காங்கிரஸ் அலுவலகத்தில் குமாஸ்தா வேலைக்குத் தான் லாயக்கு என்றதும், இந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது – அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று சொன்னதும் – அவாளின் அரசியல் குருநாதர் ஆச்சாரியார் என்பதைப் பத்திரமாக மறக்கடிக்க முயல்வதைக் கவனிக்க வேண்டும்.
பசுவதைத் தடைச் சட்டம் என்று சொல்லி ஒரு பட்டப் பகலில் டில்லியில் இருந்த காமராசரைப் படுகொலை செய்ய திரிசூலங்களைத் தூக்கி வந்த கூட்டத்தின் அடிவருடிகளா காமராசரை உயர்த்திப் பேசுவது?
– – – – –
- கேள்வி: தொழிலாளியின் வளர்ச்சியை முதலாளி விரும்புவாரா?
பதில்: முதலாளியின் வளர்ச்சியை விரும்பும் தொழிலாளியின் வளர்ச்சியை, முதலாளியும் விரும்புவார்.
பதிலடி: கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை இப்படித்தான் எழுதுவார்.
– – – – –
- கேள்வி: மாணவர்கள் இல்லாததால், 207 தொடக்கப் பள்ளிகளை அரசு மூடி உள்ளது குறித்து?
பதில்: குழந்தைகள் பிறப்பது குறைந்து விட்டன. அதனால்தான் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன என்கிறார் ஸ்டாலின்.
பதிலடி: உத்தரப்பிரதேசத்தில் 25000க்கும் மேற்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியது பற்றி இந்தப் பூணூல்கள் பேசாது. கேட்டால் 25 ஆயிரத்தை விட, 207 பெரிய எண்ணிக்கை என்று கூட சொன்னாலும் சொல்வார்கள்.
– – – – –
- கேள்வி: முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குத் தனி இடஒதுக்கீடு தருவது பற்றி தமிழ்நாட்டில் பேச, போராட எந்தக் கட்சியும் வரவில்லையே ஏன்?
பதில்: அதில் பிராமணர்கள் இருக்கிறார்களே, வேறு என்ன காரணம் வேண்டும்?
பதிலடி: எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பார்களே. அது இவாள் விடயத்தில் மிக மிகப் பொருத்தம். முற்பட்ட வகுப்பினருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்குத் தனி ஒதுக்கீடு என்றால், அது பெரும்பாலும் பார்ப்பான் வயிற்றில்தான் அறுத்துக் கட்டும் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டனரே!
– – – – –
- கேள்வி: வைரமுத்து, முன்பு ஹிந்து கடவுளான ஆண் டாளை அவதூறாகப் பேசினார். இப்போது கம்பன் விருது பெற்றுக் கொண்டு, ‘ராமருக்கு புத்தி சுவாதீனம் இல்லை’ என்று பேசியுள்ளதைப் பற்றி?
பதில்: இழிவாகப் பேசுவது அவரது பிறவிக் குணம் என்று தெரிந்தும் அவரை அழைத்தவர்கள்தானே, இழிவாகப் பேச அவருக்கு மேடை தந்தவர்கள்?
பதிலடி: கவியரசு வைரமுத்து சொன்னதில் தவறு இருக்கிறது என்று விவாதிக்க யோக்கியதை இல்லை. ஆண்டாள் என்ற பக்தை விரகதாபம் எடுத்துப் பாடிய வரிகள் எல்லாம் படிக்கச் சகிக்காதே! ஒரு பக்தை கடவுளைக் கணவனாக்கிக் கொள்வதை எல்லாம் அக்கிரகாரவாசிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஒழுக்கம் உள்ளவர்கள் ஏற்பார்களா?
ஆமாம், அது ஒரு பக்கம் இருக்கட்டும், திருப்பாவையை ஆண்டாள் எழுதவில்லை, ஆண்டாளின் தோப்பனார் எழுதி ஆண்டாளின் பெயரைப் போட்டுவிட்டார் என்கிறாரே ஆச்சாரியார் (ராஜாஜி) – அதைப் பற்றி வாய் திறப்பார்களா?
ராமன் கடைசியில் சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது புத்தி சுவாதீனத்தால் இருக்குமோ என்று சந்தேகப்படுவது எப்படி குற்றமாகும்?
– – – – –
- கேள்வி: துக்ளக் பேனரில் சிலர், டி.வி. விவாதங்களில் கருத்துச் சொல்வதற்கு நிர்வாகத்திற்கோ, ஆசிரியருக்கோ தொடர்போ, பொறுப்போ. இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியுமா?
பதில்: ஆசிரியரான நான் உள்பட, யார் டி.வி. விவாதங்களில் பேசினாலும், அந்தக் கருத்து துக்ளக்கின் கருத்து ஆகாது. துக்ளக்கில் வரும் கருத்துக்கள் மட்டுமே அதன் கருத்துக்கள்.
பதிலடி: ‘துக்ளக்’ சுரேஷ் மீது குருமூர்த்தி அய்யருக்கு என்ன வன்மமோ!
– – – – –
- கேள்வி: ஹிந்து மதம் தனது உரிமைகளுக்காக இன்னும் எத்தனை காலம்தான் கழகங்களுடனும், சிறுபான்மையினருடனும் போராடுவது? இதற்கு முடிவே இல்லையா?
பதில்: தமிழகத்தில் உருவாகிவரும் ஹிந்து வாக்குவங்கி வலுப்பட்டால்தான் இதற்கு முடிவு ஏற்படும். உங்களைப் போல் ஹிந்துக்கள் பற்றி நல்ல எண்ணம் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடினால், சிறுபான்மை தாஜா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
பதிலடி: ஹிந்து மதத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழிவுபடுத்திவிட்டு, சற்றும் வெட்கமில்லாமல் தனக்குத் தேவைப்படும்பொழுது மட்டும் அவர்களையும் ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்வது பார்ப்பனர்களுக்கே உரிய நரித் தந்திரம்!
– – – – –
- கேள்வி: சமீபத்தில் கம்பன் கழகம் ஏற்பாடு செய்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கியது பற்றி உங்களின் கருத்து என்ன?
பதில்: கம்பர் விருது விழாவில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியது, அண்ணாதுரை கம்பரசம் என்ற அசிங்கத்தை எழுதியதற்கு, ஸ்டாலின் கேட்ட மன்னிப்பு என்று தோன்றுகிறது
பதிலடி: ஆக, கம்பன் எழுதியது அசிங்கம் ஆபாசம் என்று ஒப்புக் கொண்ட வரைக்கும் சரி.
– – – – –
- கேள்வி: ராஹுல் காந்தி சொல்லும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு உண்மையா?
பதில்: வாக்காளர் பட்டியலில் இருக்கும் குறைகள் வாக்குத் திருட்டு என்றால், அந்தத் திருட்டு 2004 தொடங்கி காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் நடந்தது. ராஹுல் குற்றச்சாட்டே வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப்படு வதை நியாயப்படுத்துகிறது என்று கூறுகிறது இந்தியா டுடே.
Yes SIR! Rahul Gandhi just ended up backing EC’s electoral, roll revision இந்தியா டுடே 7.8.2025.
பதிலடி: பிஜேபி தவறு செய்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ‘நீ ஏன் பரீட்சையில் பெயில்’ என்று கேட்டால் ‘பக்கத்து வீட்ட பக்கிரிசாமியும் பெயில்’ என்று சொன்ன கதையாக அல்லவா இருக்கிறது.