சிறீநகர், ஆக. 27 ஜம்மு– காஷ்மீரில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக, வைஷ்ணவி தேவி கோயில் ‘புனித யாத்திரை’ பாதையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 31 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணி கள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன.
போக்குவரத்து நிறுத்தம்
தாவி, பசந்தர், செனாப் போன்ற நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜம்மு-சிறீநகர்-கிஷ்த்வார்-தோடா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக, மாநி லம் முழுவதும் கல்வி நிறுவ னங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தி யாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. அடுத்த 40 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளதால், மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்ட டங்கள் மற்றும் செல்பேசி கோபுரங்கள் சேதமடைந்ததால் பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்பு துண்டிக் கப்பட்டுள்ளது. சுமார் 3,500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நிலைமை மோச மாக இருப்பதை அறிந்த முதல மைச்சர் உமர் அப்துல்லா, உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்று அவர் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
மீட்புப் பணிகள்
வைஷ்ணவி தேவி கோயிலில் அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், தேசியப் பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவடையும் வரையிலும், பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகுதான் அவர்களின் பயணம் மீண்டும் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.