வாக்காளர் உரிமைப் பயணத்தில் ராகுல்காந்தி, தேஜஸ்வியுடன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
பாட்னா, ஆக.27 பா.ஜ.க.வின் வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் ராகுல்காந்தி, தேஜஸ்வி ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பீகாரில் எதிர்க்கட்சிகள் சார்பில் வாக்குரிமைப் பயணம்!
வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் வாக்குரிமைப் பயணத்தை பீகாரில் கடந்த 17.8.2025 அன்று தொடங்கினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இந்தப் பயணம் செப்டம்பர் ஒன்றாம் தேதி பாட்னா வின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.
நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, வாக்குரிமைப் பயணத்தை ஓர் இடை வேளைக்குப் பின் ராகுல் காந்தி நேற்று (26.8.2025) மீண்டும் தொடங்கினார்.
காங்கிரஸ் தலைமையிலான இந்தப் பேரணிக்குத் தி.மு.க.வின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பயணத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் தனி விமானத்தில் இன்று (28.5.2025) காலை 7.30 மணிக்கு பீகார் புறப்பட்டுச் சென்றனர்.
இலட்சக்கணக்கான தொண்டர்கள் பேரணியில் பங்கேற்பு
தரபங்கா விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாகச் சென்ற வாக்குரிமை பேர ணியில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இலட்சக்கணக்கான தொண்டர்களும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை வெளியில் வந்தபோதே, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, ‘‘பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை கொண்ட லட்சக்கணக்கானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்’’ என்று தி.மு.க. குற்றம்சாட்டியது. வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் திருத்தப் பணி ‘‘பா.ஜ.க.வுக்குச் சாதகமாக நிலைமையை மாற்றுவதாக’’ ஏற்கெனவே விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதை இன்னும் வலியுறுத்தும் வகையில், அவர் நேரிடையாகக் களத்திற்கே சென்றிருப்பது இப்பிரச்சினையில் தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக, வடபுலத்து அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து முசாபர்பூர் வரை சாலை வழியாக இன்றைய வாக்குரிமைப் பேரணி நடைபெறுகிறது. பேரணி நிறைவடையும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசிய பிறகு சென்னை திரும்பினார்.
பீகாரில் நடைபெற்ற பேரணியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படு
கிறது.