கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல்
பெங்களூரு, ஆக. 27 தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தேவதாசி முறை ஒழிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு, விதான சவுதாவில் 25.8.2025 அன்று நடைபெற்ற பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட விழிப்புணர்வு மற்றும் பொறுப்புக்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2023 முதல் 6,635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 36 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போலியாக ஜாதிச் சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கருநாடக மாநிலம் முழுவதும் தேவதாசிகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு முடிவடைந்த பிறகு, அவர்களின் மறுவாழ்வு குறித்து திட்டம் வகுக்கப் படும்.
மேலும், தேவதாசி முறையை ஒழிப்பது பற்றியும் இறுதி முடிவு எடுக்கப்படும். தேவதாசிகளின் மறு வாழ்வுக்கு சிறப்பு நிதியுதவி வழங்குவது பற்றியும் பரிசீலித்து வருகிறோம் என்றார்.