திருச்சி, ஆக.27- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.08.2025 காலை 10.30 மணியளவில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் முனைவர். க.வனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட, உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பி.சரவணக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “பருவத்தே பயிர் செய்.!” எனும் தலைப்பில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், “பருவத்தே பயிர் செய்வதன் தேவை யையும், அவசியத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு, அவர்களின் அனுபவப் பாடங்களை, வாழ்வின் மேம்பாட்டிற்கான வழிகாட்டும் பாடங்களாக எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அலைபேசி பயன்பாட்டைத் தவிர்த்து, கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்ட மாணவர்களாக நடந்து, வாழ்வில் சிறப்பான இடத்திற்கு உயர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இறுதியில் மாணவர்களின் கல்வி சார்ந்த சந்தேகங்கள் மற்றும் படிக்க வேண்டிய விதங்கள், தனித்திறன் மேம்பாட்டிற்கான வழிவகைகள் குறித்த கலந்துரையாடலில் அவர்களின் வினாக்களுக்கு உரிய வகையில் விளக்கமளித்தார்.
நம்மை மேம்படுத்தும் சிந்தனைகள்
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 23.08.2025 காலை 10.30 மணியளவில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தன்னம் பிக்கைக் கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் முனைவர். க.வனிதா முன்னிலையில் நடை பெற்ற இந்த நிகழ்வில், திருச்சி,
ஏ.பி.சி. மருத்துவமனையின் மருந்தாளுநர். எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு “நம்மை மேம்படுத்தும் சிந்தனைகள்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.
அவர் தனது உரையில், “வாழ்வில் முன்னேற காலந்தவறாமை, நல்ல நட்பு, ஒழுக்கம் இவை மூன்றும் மிக முக்கியமான தேவைகள் என்பதை உணர்ந்து செயல்படும் போது எல்லாவிதமான வெற்றிகளும் நிச்சயம் சாத்தியமாகும். அதிகாலை எழுவதைப் பழக்கப்படுத்தினாலே பாதி வெற்றி சாத்தியம், ஊட்டச் சத்து மிக்க உணவு, நல்ல உறக்கம், செய்ய வேண்டிய செயல்களை உரிய நேரத்தில் செய்து முடித்தல் இவைகளைக் கடைபிடித்தால் மீத முள்ள வெற்றியும் நம் கைவசமாகும் அதை உணர்ந்து செயல்படுங்கள் நீங்களும் சாதனையாளர்களே” என்று தன்னம்பிக்கை விதைகளை மாணவர்கள் மனதில் விதைத்தார்.