குருவாயூர், ஆக.27 கேரள மாநிலம் குருவாயூரில் கிருஷ்ணர் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்தக் கோயிலின் ‘புனித’ குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற யூ டியூபர் குருவாயூர் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டாராம்.
சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ள ஜாஸ்மின் ஜாபர், கேரள பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். குருவாயூர் கோயிலில் இந்து அல்லாத பிற மதத்தவர்களுக்கு அனுமதி கிடையாதாம். இந் நிலையில் ஜாஸ்மின் ஜாபர், கோயில் குளத்தில் இறங்கி ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டதாம். கோயில் குளத்தின் ‘புனித’த்தன்மை கெட்டுவிட்டதாக பக்தர்கள் புகார் செய்தனராம்.
இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று (26.8.2025) காலை முதல் கோயிலில் வெவ்வேறு வகையான பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் நேற்று (26.8.2025) பிற்பகல் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நாட்களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.