சென்னை, ஆக.26- தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி துறையூரில் நடை பெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்க்க 108 ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கர்ப்பமாக இருந்த மருத்துவ உதவியாளரை அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செயலை கண்டிப்பதுடன், வன்முறையை தூண்டும் விதமாக பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் இன்று (26.08.2025) சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சினிமா மோகம் – எச்சரிக்கை!
கதாநாயகி ஆக ஆசைப்பட்ட
கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.24 லட்சம் மோசடி; 2 பேர் கைது
புதுடில்லி, ஆக.26– டில்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்ட அவர், தனது சுயவிவரத்தை திரைத்துறையை சார்ந்த நபர்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், அவரை ஒரு நபர் தொடர்பு கொண்டு தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். அந்த நபர் மேலும் சிலரின் தொடர்பு எண்களை கொடுத்து அவர்களிடம் பேசுமாறு மாணவியிடம் தெரிவித்துள்ளார். அவர்களிடம் பேசியபோது, நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் ரூ.24 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய அந்த மாணவி, தனது பெற்றோரிடம் ரூ.24 லட்சம் பணத்தை வாங்கி அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அந்த கும்பல், மாணவியின் தொடர்பை துண்டித்துவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத மாணவி, இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து லக்னோவைச் சேர்ந்த தருண் சேகர் சர்மா, டெல்லியைச் சேர்ந்த ஆஷா சிங் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.