சென்னை, ஆக.26- நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு
சென்னை தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார்.
அப்போது சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் தந்தை சந்திரசேகர் உடன் இருந்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கவின் கொலை வழக்கில் மேலும் 2 குற்றவாளிகளை கைது செய்யவில்லை. அவர்களையும், கூலிப்படையையும் உடனே கைது செய்ய வேண்டும், கவினின் தம்பிக்கு அரசு வேலை வேண்டும். குடும்பத்திற்கு பாதுகாப்பு என்பது போன்ற கோரிக்கைகளை முதலமைச்சரிடம் சந்திரசேகர் வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.
பள்ளி ஆசிரியையாக உள்ள கவின் தாயாருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம். இந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள்
ஆணவக்கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது.
இதை தேர்தல் அரசியலுடன் பொருத்திப் பார்க்கக் கூடாது. கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைப்பது உள்பட பல கோரிக்கைகளையும் வைத்திருக் கிறோம்.
தூய்மைப் பணியாளர்கள் பற்றி நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு பலரும் விமர்சிக்கின்றனர்.
தனியார் மயமாக்கக் கூடாது, அவர்களை என்.யு.எல்.எம். என்ற அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கவேண்டும் என்பதையும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதையும் வலி யுறுத்தி இருக்கிறோம்.
எந்திரமயம்
ஆனால் அந்த தொழில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற் கானது என்ற வகையில் நிரந்தரப் படுத்திவிடக் கூடாது என்று சுட்டிக் காட்டியுள்ளோம்.
அந்தத் தொழிலை எந்திரமயமாக்க வேண்டும். அதற்கான தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ளும் யாரும் அந்தப் பணியை செய்யலாம் என்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். அதை நோக்கி அரசு இயங்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
பணி நிரந்தரம் வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எனது கருத்து தவறாக திரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக நான் பேசியதாக கருத்து பரப்பப்பட்டது.அது உண்மையல்ல.
அடையாள அரசியல்
சுதர்ஷன் ரெட்டி, மனித உரிமை ஆர்வலர். எனவே அவரை துணை குடியர்சுத்தலைவராக தேர்வு செய்ய வேண்டும். அதில் தமிழர், தமிழர் அல்லாதவர் என்ற அடையாள அரசியல் தேவையில்லை என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.