பூவிருந்தவல்லி, ஆக.26- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூவிருந்தவல்லி மற்றும் மாதவரம் பகுதியில் பந்தல் அமைத்த போது மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
பூவிருந்தவல்லியில்…
சென்னை பூவிருந்தவல்லி, பிராடிஸ் சாலையில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த கோவில் முன்பு வண்ண, வண்ண கொடிகள் மற்றும் மின்விளக்குகள், ஒலிபெருக்கிகள் வைத்து, பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பூவிருந்தவல்லி, மேல்மா நகரைச் சேர்ந்த பரத் (வயது 28) மற்றும் அவரது நண்பர்கள் தென்னவன் உள்பட 4 பேர் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரும்பு கம்பிகளால் ஆன அரேபியன் பந்தல் அமைக்கும் போது மேலே சென்ற மின்கம்பியில் பந்தலில் உள்ள இரும்பு கம்பி உரசியதாக தெரிகிறது.
மின்சாரம் தாக்கியது
இரும்புக் கம்பியிலிருந்து மின்சா ரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்து போனார். மேலும் 2 பேர் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பலியான பரத் உடலை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த பரத்தின் பெற்றோர் பூவிருந்தவல்லி நகராட்சி யில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர், மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
மாதவரத்திலும்….
இதேபோல் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணம்பாளை யம் மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 22). இவர், நேற்று (25.8.2025) மாத வரம் ராஜாஜி தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதற்காக சாமியானா பந்தல் போடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மேலே சென்ற மின்கம்பியில், சாமியானா பந்தலில் இருந்த இரும்புக் கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பிரசாத் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி மாதவரம் காவல்துறை ஆய்வாளர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பள்ளிக் கல்வி அமைச்சுப் பணியாளர்களுக்கு
ஆசிரியராகப் பதவி உயர்வு
சென்னை, ஆக. 26- பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின் படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் அதன்படி தகுதியான 39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி அவர்களுக்கான அரசுப் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.