கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு!
கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா?
சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா?
சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணையை வரவேற்றும், கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? என்று கேள்வி எழுப்பியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தமிழ்நாடு அரசிற்கு இடையறாமல் அழுத்தம் தந்து வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேல் முறையீட்டினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை ஏற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை தந்துள்ளதை வரவேற்கிறோம்.
நடைபாதைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு மிகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி, அமைக்கப்பட்டுள்ள திடீர்க் கோயில்கள், நடைபாதைக் கோயில்கள் பற்றி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், நிர்வாகத் துறையின் அரசு ஆணைகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்படாத வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்களாகவே’ இருப்பது தெளிவான ஒன்றாகும். அன்றாடம் அந்தச் சாலை வழியே செல்லும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த கொடிக் கம்பம் அகற்றுவதில் காட்டும் கண்டிப்பினை, விபத்துகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்குப் பெரும் தடையாகியுள்ள நடைபாதைக் கோயில்களை அகற்ற ஏன் இதே அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கொடிகள் பரப்புரைக்கு;
கோயில்கள் கொழுத்த வருவாய்க்கு!
கோயில்கள் கொழுத்த வருவாய்க்கு!
கோயில் திருவிழாக்களில் ஏற்படும் கலவரங்களைவிட, அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பத் தகராறு, இடையூறு வெகுவாகக் குறைவு. சட்டம் – ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் தீர்வு காணும் நிலையும் உள்ளது. இதில் காட்டும் வேகமும், கண்டிப்பும் நடைப்பாதைக் கோயில்கள் பற்றியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கப்படுமானால் அனைத்திலும் சமநீதி வழங்கும் நிலை ஏற்படும்.
ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள் ஒரு வகையான பரப்புரைதான். நீதித் தராசும், கண்டிப்பும் நடைப்பாதைக் கோயில்கள், ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்களை அகற்றுவதில் இருக்க வேண்டும். அதிலும், சாலைகள் தோறும் உள்ள நடைபாதைக் கோயில்களை (வருவாய்க்கான) அகற்றுவதிலும் கவனம் வந்தால் ஊருக்கும் நன்மை ஏற்பட்டு, போக்குவரத்து விபத்துகளும் தவிர்க்கப்படும்.
கட்டுப்பாட்டுக்கு அடக்காத கோயில்கள்
திடீர்க் கோயில்கள் பக்தி வணிக நிலையங்களாகும் நிலை. தியாகராயர் நகரில் திருப்பதி தேவஸ்தான விளம்பர அலுவலகமாக இருந்து – இப்போது பெரும் கோவிலாகவே மாற்றப்பட்டு கொழுத்த வருவாய்க்கு வழி ஏற்பட்டுள்ளது. ஆந்திர திருப்பதி தேவஸ்தானத்தின் சட்டம்தான் அங்கு செல்லும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி அதற்கு அனுமதியோ, அதன் கட்டுப்பாட்டுக்குள்ளோ வராத நிலைதான்!
பல ஆண்டுகளுக்குமுன் ஆலிவர் சாலை தமிழ்நாடு கூட்டுறவு நிலவள வங்கிக் கட்டடத்தில் ஒரு சிறு பூஜையில் தொடங்கி இன்று அந்த வங்கியையே மறைத்துப் பெரும் கோயிலாகவே ஆக்கப்பட்டுள்ளது! அது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் முற்றிலும் எதிரானது. இருந்தும் கண்டு கொள்ளப்படுவதில்லை. பல நேரங்களில் அரசுகள்கூட, நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் புறந்தள்ளி ஓட்டுக் கண்ணோட்டத்துடன் இந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டும் காணாத நிலையே உள்ளது!
அரசு அலுவலக வளாகங்களில் மதச் சார்பற்றத் தத்துவத்திற்கு முற்றிலும் எதிராகப் புதிது புதிதாகக் கோயில்கள் எழுப்புவது அரசின் சட்டப்படி நியாயமா? அனுமதிக்கத்தக்கதா?
நீதித்துறையும், நிர்வாகத்துறையும் கொடிகளுக்கு ஓர் அணுகுமுறை கோயில்களுக்கு மற்றொரு அணுகுமுறை என்ற வேறுபாட்டுக்கு இடந்தரலாமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பாராட்டு
வழக்குப் போட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நமது பாராட்டு!
ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் விளம்பரப்படி, இந்தக் கொடிகள் அகற்றத்தை எதிர்த்து பல கட்சிகளும், இயக்கங்களும் வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் (திராவிடர் கழகம் உள்பட) தாக்கல் செய்துள்ளன.
சிலை நிறுவ எளிய நடைமுறை தேவை
அதுபோல பிரபல தலைவர்களுக்குச் சிலை எழுப்புவதில் இருக்கும் மிகச் சிக்கலான நடைமுறை விரும்பத்தக்கதாக இல்லை. இதற்கு எளிய முறையில் மறுதீர்வு காணப்பட வேண்டும். அனுமதிப் பெறுவதற்கு முதலமைச்சர் வரை கோப்பு சென்று வர வேண்டும் என்பது முதலமைச்சரின் பணிச்சுமையை அதிகமாக்கும் தேவையற்ற ஒன்று என்பது நமது உறுதியான கருத்தாகும். விதிமுறைகளுக்கு நாம் எதிரியல்ல. ஆனால், அதுவே சிக்கலான சீர்கேடுகளுக்கு இடம் தருவதாக அமையக்கூடாது.
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
26.8.2025