விருதுநகர், ஆக.25- விருதுநகர் மாவட்டத்தில் சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் பிரதாப். இவரின் தந்தை முருகவண்ணன் விவசாயி. இவரின் தாயார் முல்லைக்கொடி.இவருக்கு தம்பியும் உள்ளார். திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்தார்.
பள்ளிப் பருவத்தில் இருந்தே
அய்ஏஎஸ் கனவு
பள்ளியில் படிக்கும்போதே அய்ஏஎஸ் ஆக வேண்டும் என உறுதி பூண்டார். பள்ளிப் பருவத்தில் மாணவர்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு அய்ஏஎஸ் ஆகத்தான் இருக்கும்.
ஆனால், கல்லூரி, வேலை என அப்படியே குழந்தைப் பருவ கனவாகவே போய்விடும். பிரதாப்பிற்கு அப்படி இல்லை. பள்ளி மாணவராக இருக்கும்போதே தீர்மானம் எடுத்தார். ‘நான் அய்ஏஎஸ் அதிகாரியே ஆவேன்’ என உறுதியாக நின்றார்.
பொறியியலை தேர்ந்தெடுத்தது ஏன்?
அந்த உறுதியுடன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதத் தயாராக தொடங்கிய அவர், பள்ளிப் படிப்பை முடித்தார். உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என யோசிக்கும்போது, அவர் தேர்வு செய்தது பொறியியல். இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறிய அவர், ”சிவில் சர்வீஸ் தேர்வை எழுத ஏதேனும் ஒரு டிகிரி போதும் என்று எனக்கு தெரியும்.
எனவே கல்லூரிப் படிப்பு பிளான் – பி ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு கெமிஸ்ட்ரி மிகவும் பிடிக்கும். அதனையே படிக்க விரும்பி கெமிக்கல் பொறியியல் தேர்வு செய்தேன்” என கூறியுள்ளார்.
21 வயதில் தேர்விற்குத் தயார்
கல்லூரியில் கடினமாக உழைத்த அவர், 21 வயதில் தேர்வை எழுதத் தயாரானார். இரவு பகலாக ஒரு நாளுக்கு 8 மணி நேரம் படித்தார். “சிவில் சர்வீஸ் தேர்விற்கு நிறைய புத்தகங்கள், குறிப்புகள் உள்ளன. அதிலிருந்து ஒவ்வொரு தலைப்புகளும் சரியானவற்றை தெரிவுப்படுத்தி படித்தேன்” என கூறியுள்ளார். 2016ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வை எழுதினார். முதல்நிலை, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றார்.
21 வயதில் அய்ஏஎஸ் எப்படி கொடுப்பது?
நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும்போது, அவரின் வயது 21. நேர்முகத் தேர்வில் “21 வயதில் அய்ஏஎஸ் எப்படி கொடுப்பது” என்பதே அவரின் முதல் கேள்வியாக இருந்தது. அப்போது, யுபிஎஸ்சி தேர்வை எழுத குறைந்தபட்ச வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு நான் தகுதியானவரே என கூறியுள்ளார். மேலும், கெமிக்கல் பொறியியல் படித்து, ஏன் யுபிஎஸ்சி தேர்வு செய்தீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கெமிக்கல் பொறியியல் முதன்மை ஆகும். அந்த வகையில், மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பேன். மக்களுக்கு தேவையான மற்றும் ஊழலற்ற, நேர்மையான சூழலை உருவாக்குவேன் என பதிலளித்தார்.
ஊரே கொண்டாடிய வெற்றி
அப்படி, முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 21ஆவது இடமும், தமிழ்நாட்டில் முதல் இடமும் பெற்றார். லட்சக்கணக்கானவர் எழுதும் தேர்வில், 21ஆவது இடம் பிடித்து சாதித்து காட்டினார் பிரதாப் அய்ஏஎஸ். அவரின் இந்த வெற்றியை அவரின் ஊரே கொண்டாடியது.
அவரின் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்று மட்டுமின்றி, முதல் அரசு அதிகாரியும் அவரே ஆவார். யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு, தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரதாப் அய்ஏஎஸ், கடைசி நேரத்தில் ஏற்கெனவே படித்ததை மீண்டும் நன்கு படிக்க அறிவுறுத்தினார். கடைசி நாள்களில் மனதை அமைதியாக வைத்துகொள்ளுமாறு கூறுவார். அவரின் வெற்றிக்கு பெற்றோர்களும், நண்பர்களும் உதவியாக இருந்ததாக பேட்டியில் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அய்ஏஸ்
இளம் அய்ஏஎஸ் ஆக தேர்வான பிரதாப், பயிற்சிக்கு பின்னர் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். டில்லியில் நகர்புற மேம்பாட்டு துறையில் உதவி செயலாளர், தர்மபுரி மாவட்டத்தில் துணை ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர், கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஆணையாளர், தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
இவரின் பணியில் செயல்பாடுகளின் மூலம் மக்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றவர் பிரதாப் அய்ஏஎஸ். பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்கியுள்ளார். ஒரே மாதத்தில் 1000 குளங்களை வெட்டி கின்னஸ் சாதனைப் படைத்தார்.
இதன் மூலம் முதலமைச்சர் விருதையும் பெற்றார். அரசு அதிகாரி கனவுடன் படித்துவரும் இளைஞர்களுக்கு பிரதாப் அய்ஏஎஸ் உத்வேகமாகத் திகழ்கிறார்.