“பெண்களுக்குத்தான் ‘Miss’ அல்லது ‘Mrs’, ‘செல்வி’ அல்லது ‘திருமதி’ இந்த விளிச் சொற்கள். ஆண்களை பொறுத்த வரையில் ஒன்றே ஒன்றுதான். Mr அல்லது திரு என்பது அவர்களுக்கு திருமணத்தின்பின் மாறுவதில்லை, இது இன்றும் தொடர்கிறது.’
‘Ms’ என்பதும் பெண்களிடையே அண்மைய காலங்களில் உபயோகிக்கப்படுவதுண்டு. அதன் பொருள், விளக்கங்கள் பல்வேறு இடங்களில் முரண்பட்டாலும், பலர் அதனை திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவான பொருளில் எடுத்துக்கொள்கின்றனர். ஏன் இந்த பாலின வேறுபாடு என்பது இன்று வரை விடை தெரியாத கேள்வி. திருமணம் புரிந்தவரா என்று பெண்ணைப் பார்த்தவுடனும் பெயரை சொன்னவுடனும் உலகிற்கு தெரிய வேண்டும் என்ற அக்கறை ஆண்கள் விசயத்தில் இல்லையே? தாலியும் குங்குமமும் மெட்டியும் பெண்களுக்கு மட்டும் அடையாளமாக இருப்பதுதான் வேடிக்கை.
தந்தைவழி சமூகத்தில் திருமணத்துக்குப் பின்னர், பெண்கள் தங்கள் கணவரின் பெயரைக் குடும்பப் பெயராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. சில பெண்கள் தந்தையின் பெயரைக் குடும்பப் பெயராக தொடர்ந்து உபயோகிப்பார்கள். கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு என பல இடங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும் சிக்கல் காரணமாக தமது குடும்பப் பெயரை மாற்றாமல் இருப்பவர்கள் உண்டு. கணவன் பெயரைக் குடும்ப பெயராக ஏற்றுக் கொண்டவர்கள், விவாகரத்துக்குப் பிறகு மறுபடியும் தந்தை பெயரை இணைத்துக் கொள்வார்கள். மறுபடியும் ஆவணங்களில் பெயர் மாற்றங்கள் வேண்டிய நிலை உண்டாகும். ஆண்கள் இந்தப் பெயர் மாற்ற சிரமங்களுக்கு முகம் கொடுப்பதில்லை.
கேரளாவில் உள்ள சில சமூகங்களில், குறிப்பாக நாயர் சமூகத்தில், மருமக்கதாயம் என்றழைக்கப்படும் தாய்வழிச் சமூக அமைப்புமுறை உள்ளது. இதில், சொத்துரிமையும், வாரிசு உரிமையும் தாயின் வழியில் வருகிறது. இதன் காரணமாக, தாய்வழிப் பெயர்களும் பயன்படுத்தப் படுகின்றன. நேபாளம், சீனா போன்ற நாடுகளிலும் தாய்வழிப் பெயர்கள் பின்பற்றப்படும் வழக்கம் உண்டு. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பழங்குடிச் சமூகங்களில், தாய்வழிச் சமூக அமைப்புமுறை நிலவுகிறது. இந்தச் சமூகங்களில், தாய்வழிப் பெயர் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
‘இனிமேல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விவரம் தேவையில்லை. தந்தையின் பெயரை குறிப்பிடவும் அவசியம் இல்லை, தாயின் குடும்பப் பெயரை பயன்படுத்தலாம்’ என இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் கடந்த மாதம் அறிவித்திருந்தது, சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இச்சட்டத் திருத்தம் சமூக ரீதியில் முற்போக்கான நகர்வு மட்டுமல்லாது பல நலன்களைக் கொண்டுள்ளது.
விவாகரத்து, பாலியல் வன்முறை போன்றவற்றின் பின்னர் தந்தை பெயரை குறிப்பிட விரும்பாத அல்லது இக்கட்டான சூழ்நிலைகளைக் கொண்ட பெண்களின் உரிமைகளும் பாதுகாப்பும் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. தந்தையில்லா குழந்தைகள் தாயின் பெயரால் அடையாளம் பெற முடியும். ‘அப்பன் பெயர் தெரியாத பிள்ளை’ என்று குழந்தைகளையும் தாய்மாரையும் அவமானப்படுத்தும் சமூக இழி செயல் களைப் பெரிதும் குறைத்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இலங்கையைப் பொறுத்த வரை சட்டரீதியாக மிக முக்கிய மைல்கல் இது. பிறப்பைப் பதிவதற்குக் கட்டாயம் தந்தை பெயர் வேண்டும் என்கிற வற்புறுத் தலால், மோசமான வாழ்க்கையைப் பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஆபத்து பெண்களுக்கு இருந்துள்ளது. சட்டரீதியான இப்புதிய அங்கீகாரம், பெண்களும் குழந்தைகளும் ஆதரவற்று நிற்க வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மாருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் சட்ட அங்கீகாரமும் சமூக மரியாதையும் கொடுக்கப்பட வேண்டியதே.
அது மட்டுமல்ல பாதுகாப்பற்ற கருச்சிதைவுகள் (abortion) மேற்கொள்வதும் இதனால் தவிர்க்கப்படும். இலங்கையைப் பொறுத்தவரை தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே, கருச்சிதைவு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் இலங்கையில் கருக்கலைப்புகள் சட்டரீதியாகும் பட்சத்திலேயே, பிறப்புச் சான்றிதழ்களில் தந்தை பெயர் அவசியமில்லை என்கிற சட்டப்பூர்வமான மற்றும் சமுக அங்கீகாரம் முழுமை யடைகிறது. குழந்தையைப் பெற்றெடுப்பதா இல்லையா என்பது பெண்ணின் தீர்மானமே.
பிறப்புச் சான்றிதழில் தந்தை பற்றிய பதிவு இல்லாமல் போவதால், பல சமூகச் சீர்கேடுகள் உருவாகும் என்று அங்கே இடதுசாரிகள்கூட ஓலமிடத் தொடங்கினர். அவர்கள் பதிவிட்ட காரணங்களோ விசித்திரமானவை. தந்தையின் மரபணு அடையாளம் ‘களையப்படுவதால்’ தந்தையின் மரபியல் நோய்கள் பற்றிய அறிய முடியாது போய் விடுவதாகவும் அது குழந்தையின் சுகாதாரத்தைப் பாதிக்கு மெனவும் கூறப்பட்டது. மரபணு விவரங்கள் பிறப்புச் சான்றிதழ் மூலமாகத்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவை தனியாக மருத்துவப் பதிவுகளோடு இணைக்கப்படலாம். இரண்டாவதாக ‘குடும்பத்தின் சமூக அடையாளம் சிதைவடைகிறது’ என கூறப்பட்டது.
குடும்பம் என்பது தாய், தகப்பன், பிள்ளைகள் கொண்ட வெறும் nuclear family வடிவம் மட்டுமே அல்ல. குடும்பங்கள் பல வடிவங்கள் கொண்டவை, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களும் இவற்றில் அடக்கம். 2016 மக்கள்தொகை மதிப்பீட்டின் படி, இலங்கையிலுள்ள 25% குடும்பங்கள் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களே.
திருமண உறவுகளின் மீதான நன் மதிப்பீடு குறைகிறது எனவும் குற்றஞ் சாட்டப்பட்டது. இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் திருமணம் என்பது பிறப்பு, இறப்பு போன்று இயற்கையான நிகழ்வு அல்ல என்பதைப் பார்த்து விட்டோம். திருமணம் என்பது நடைமுறையில் சந்தை வியாபாரமாகவும் உடன்படிக்கையாகவும் மாறிவிட்ட முதலாளித்துவ சமூகத்தில், திருமணம் என்பது தனிப்பட்ட தெரிவு என்பதே இன்றைய சமூக நிலை. மார்க்சியமும் குடும்பம் என்பது ஒரு பொருளாதார அலகாகவே இயங்குகிறது என இனங் காண்கிறது.
உண்மையான இருபக்க அன்பின் அடிப்படையில் மட்டுமே குடும்பங்கள் எழவில்லை என்பதே உண்மை. எல்லோருக்கும் நீதியான, நியாயமான முறையில் இயங்கும் தற்போதைய தனிக் குடும்பங்கள் மாறுவது நல்ல விசயம்தான். அதை வலிந்து பிடித்துக் கொள்ள தேவையில்லை. என்ன தான் நவீன உபகரணங்கள் வந்தாலும் ஊதியம் பெற்றாலும், மார்க்சியம் தோன்றி 200 ஆண்டுகளுக்குப் பின்னும் பெண்கள் இன்னும் சமையலறையில்தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
பரம்பரை உரிமை, சொத்து உரிமை, குழந்தையின் பொறுப்பு, தாயாரும் தந்தையும் பிரிந்த பின் பராமரிப்பு போன்ற சட்டவழக்குகளில் குழப்பம் ஏற்படும் என இன்னொரு காரணம் முன் வைக்கப்பட்டது. இவை அனைத்தும் தந்தையின் பெயரால் மட்டுமே சட்டரீதியாகத் தீர்க்கப்பட வேண்டுமென எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
திருமணத்திற்கு முந்திய உறவிலோ, விவகாரத்தை சந்திக்கும் உறவுகளிலோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சூழ்நிலைகளிலோ தந்தை பெயரை பதிய முடியாத தருணங்கள் எழலாம். இங்கு உயிரியல் ரீதியாக தந்தை என்பவர் பெரும்பாலும் அதற்கான பொறுப்பை ஏற்க முன் வராத ஒருவராக இருப்பார். குழந்தைக்கான பொறுப்பை வளர்ப்பிற்கான செலவினங்களை ஏற்றுக் கொள்ளாத ஒருவர், எவ்வாறு தந்தை என்ற உரிமையைக் கோர முடியும்? ஏனைய பிறப்புகள் வழமை போன்று இரு பெற்றோர் பெயருடனும் பதியப்படும் வாய்ப்புகளே அதிகம்.
தந்தையின் பெயரைப் பதிவு செய்யாமை, ஓர் இனத்தின் வரலாற்றுப் பதிவு மற்றும் தலைமுறைக்கிடையிலான தொடர்பை அழிக்கிறது என்ற ஆணாதிக்க வாதமும் முன் வைக்கப்பட்டது.
வரலாறு மற்றும் பரம்பரைத் தொடர்ச்சி பற்றிய பதிவுகள் தாய்வழி மூலம் தொடர்ந்தால் என்ன? அவை தந்தை வழியாகத்தான் பதியப்பட வேண்டும் எனக் கூறுவது எந்த விதத்திலும் சரி இல்லை. ஆக மொத்தத்தில் ஆண் மய்ய சமூகம் மாறி விடுமோ என்ற அச்சம்தான் இவர்களிடம் தெரிகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், குடும்ப அலகு தந்தை வழி அமைப்பாகவே எப்போது இருந்துவிட விடும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். குடும்ப அதிகாரம் பெண்களிடம் சென்று விடக்கூடாது என்ற உள்நோக்கமும் புரிகிறது.
இன்றைய தந்தை வழி ஆண் மய்ய சமூகத்தில் ஒற்றைப் பெற்றோராக (பெரும்பான்மை பெண்கள்) ஆங்காங்கே குடும்பங்கள் உருவாவதும், தாய்வழிச் சமூகத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருப்பதும் ஓரே மாதிரியான விசயங்கள் அல்ல. முன்னையது உளவியல் ரீதியான ஒரு சில பிரச்னைகளை எதிர் நோக்க வேண்டி நேரலாம். அவற்றைக்கூட கடந்து வெற்றி கொள்ள சமூக ஆதரவுத் தளங்கள் உண்டு.
ஆனால் தாய்வழிச் சமூகத்தில் வாழும் பெண்களோ, குழந்தைகளோ உளச்சிக்கல்களை கொண்டுள்ளார்கள் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. இன்றும் தாய்வழிச் சமூகங்களில் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சலாந்தின் சூரிச் நகருக்கு தோழியொருவரை சந்திக்கச் சென்றபோது, அங்கு ஒற்றைப் பெற்றோர்கள் மட்டும் தனியே வாழும் ‘நவீன குடியிருப்புகளை’ காணமுடிந்தது. அங்கே பெண்கள் பாதுகாப்புடனும் தன்னிறைவுடனும் வாழ்கிறார்கள். முன் அனுமதியின்றி ஆடவர்கள் வருகை தர முடியாது. இவ்வகையான குடியிருப்புக்கள் காலப்போக்கில் நவீன கிராமங்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
தாய்வழிக் கோட்பாட்டினை மாக்லென்னன் (McLennan), மார்கன் (Morgan), ஜெங்ஸ் (Jenks) ஆகியோர்கள் ஆராய்ந் துள்ளனர். மாக்லென்னன் 1865ஆம் ஆண்டு வெளியிட்ட Primitive Society என்ற நூலிலும், மொர்கன் 1877ஆம் ஆண்டு வெளியிட்ட Studies in Ancient Society என்னும் நூலிலும், ஜெங்ஸ் 1900ஆம் ஆண்டு வெளியிட்ட A History of Politics என்னும் நூலிலும் தாய்வழிக் கோட்பாடு இரத்த உறவு அடிப்படையில் பெண்களே குடும்பங்களுக்குத் தலைமை தாங்கினர் எனக் கூறப்படுகிறது. ஜெங்ஸ் அவுஸ்திரேலியாவின் தொல்குடி ஒன்றை இதற்கான சான்றாகக் காட்டுகின்றார்.
மார்கன், செவ்விந்தியர் பற்றிய முதல் ஆய்வு நூலை 1851ஆம் ஆண்டு எழுதினார். இது இராக்காய்ஸ் (Iroquois) என்ற செவ்விந்திய இனம் பற்றிய ஆய்வு ஆகும். இவ்வினத்தின் தாய்வழிக் குடும்ப அமைப்பு, உறவுமுறை பற்றிய அவருடைய கண்டுபிடிப்புகள், பிற செவ்விந்தியர் இனங்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு ‘System of Consangunity and Affinity of the Human Family’ (1871) என்கிற நூலாக வெளியிடப்பட்டது.
மார்கனின் நூல், ஏங்கெல்ஸின் எழுத்துக்களில் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஏங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (Origin of the Family – Private property and State – 1884) என்னும் நூல், மார்கனின் நூலின் கருத்துக்களோடு ஒத்திருக்கிறது.
இன்னும் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்கின்ற போதிலும், புதியதொரு சமூகத்திற்கான கூறுகள் வெளிப் படுவதை நாம் காண்கிறோம். இன்றைய நவீன உலகில் தாய்வழிச் சமூகங்களுக்கு அடித்தளங்கள் உருவாகும்போது காலப்போக்கில் அவை வர்க்க வேறுபாடுகளை அறுத் தெறிந்து, புதிய வகை சமூகமாக உருவெடுக்குமா என்பது, காலநீரோட்டத்தில் ஏற்படும் சமுக இயங்கியல் மாற்றங்களால் தெரியவரும்.
அஞ்சனா
பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றி யுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
நன்றி: ‘ஹெர்ஸ்டோரிஸ்’