ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி உடனே ரத்து : அரசு நடவடிக்கை

2 Min Read

ராமேசுவரம், ஆக.26- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், மீனவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக இந்த அனுமதியை திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன்

ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கை அடிப்படையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 1,403 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய், இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அனுமதி பெற்றது. இதில் முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிச்சியம், பேய்குளம், வல்லக்குளம், அரியக் குடி, காவனூர், சிறுவயல், ஏ.மணக் குடி உள்ளிட்ட பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை ரூ.675 கோடி செலவில் தோண்ட திட்டமிட்டது.

இந்த திட்டத்துக்கு அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி கடந்த 2023 அக்டோபரில் விண்ணப்பித்தது. இந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம், 20 இடங்களில் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தற்போது அனுமதி வழங்கியது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தால் கடல் வளம் அழியும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, நிதி, சுற்றுச் சூழல், காலமாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (24.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு கடந்த 2020 பிப்ரவரி 20-ம் தேதி தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர்மாவட்டத்தின் குறிப்பிடப்பட்ட டெல்டா பகுதி களில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி, மீத்தேன், ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, அகழ்வுத் தொழில் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

2023-ல் மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் தடை விரிவு படுத்தப்பட்டது. இந்த சூழலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஓஎன்ஜிசி விண்ணப்பித்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நேரடி யாக சுற்றுச் சூழல் அனுமதி வழங்கியுள்ள செய்தி அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஓஎன்ஜிசி-க்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெறுமாறு ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகள், மக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதல்வர் ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவு. தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் எந்த ஒரு பகுதியிலும் இந்த திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *