ஆம்புலன்ஸ் வண்டிபற்றி எடப்பாடி பழனிசாமியின் அறியாமை!
மேனாள் முதலமைச்சரின் வன்முறைப் பேச்சால் ஆம்புலன்சையும், ஓட்டுநரையும் தாக்கிய அ.தி.மு.க.வினர்!
மேனாள் முதலமைச்சர் அறியாமையால் ஆம்புலன்ஸ்பற்றி தெரிவித்த வன்முறைப் பேச்சின் எதிரொலியால் அ.தி.மு.க.வினரால் ஆம்புலன்சையும், அதன் ஓட்டுநரையும் தாக்கியதை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்றைய தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு, பா.ஜ.க.,
ஆர்.எஸ்.எஸ். தயவு நாடி கூட்டணி அமைத்து, தேர்தல் பிரச்சாரத்தினை நடத்தி வருகிறார்!
அவரது பரப்புரைப் பயணத்தில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது, அப் பாதையில் ‘அவசர மருத்துவத் தேவைக்காக’ கூட்டத்திற்குள் சென்ற 108 சேவை ஆம்புலன்ஸ் வண்டியை இயக்கிய ஓட்டுநர்மீது எடப்பாடி பழனி சாமி அவர்கள் நிதானம் இழந்து, ‘‘அடுத்தமுறை, இதுமாதிரி நடந்தால், ஓட்டுபவரே ‘நோயாளி’யாக ஆம்புலன்சில் செல்லவேண்டிய நிலை ஏற்படும்’ என்று ஆவேசப்பட்டுப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க, தரம் தாழ்ந்த பேச்சு.
மேனாள் முதலமைச்சர்
அறியாமையின் உச்சம்!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி வகித்து, இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் தகுதியில் உள்ள ஒருவர் – அடுத்தும் மீண்டும் தான் முதலமைச்சர் பதவியைப் பெற, மோடி – அமித்ஷா– பா.ஜ.க. –
ஆர்.எஸ்.எஸ்.சுடன் கூட்டுச் சேர்ந்து, அண்ணா பெயரில்,
எம்.ஜி.ஆர். தொடங்கிப் பல ஆண்டு காலம் ஆட்சியிலும் இருந்த ஒரு கட்சியை, கொள்கை பலி பீடத்தில் நிறுத்திவிட்டுள்ள நிலையில், பிரச்சாரப் பரப்புரையில் இப்படிப் பேசுவது அப்பட்டமான ஆணவம் மட்டுல்ல, அறியாமையின், அநாகரிகத்தின் உச்சமும் ஆகும்.
‘ஆம்புலன்சின் உள்ளே யாரும் இல்லை’ என்று கூறுவது, அதுபற்றி அடிப்படைத் தகவல் கூடவா தெரியாமல் உள்ளது?’’ என்று கேட்கவே எவருக்கும் தோன்றும்.
‘மருத்துவப் பயனாளிகள்’ அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் உதவி தேவைப்பட்டு, அதனை மருத்துவமனைக்குச் செல்வதற்கு அழைப்பு விடுத்தால், அப்படிப்பட்ட மருத்துவப் பயனாளிகளை அழைத்து வர, ஆம்புலன்ஸ் காலியாகத்தானே செல்லும். மகப்பேறுக்காகவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் உள்ளவர்களோ மருத்துவமனைக்குச் செல்ல அழைப்பு வந்தால், உள்ளே ஆள் இல்லாமல் குறிப்பிட்ட முகவரியைத் தேடித்தானே செல்வார்கள்.
சாலைகளில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாக னங்கள் செல்லும் போது வழிவிடாமல் செல்பவர்க ளுக்கு, தடுப்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் வழங்குவதற்கு இந்திய மோட்டார் வாகன (2019 திருத்த)ச் சட்டம் பிரிவு 194–E வகை செய்கிறது. பன்னாட்டளவில் இதுகுறித்து பல்வேறு சட்டங்களும் உள்ளன.
இது எப்படி ஒரு மேனாள் முதலமைச்சருக்குத் தெரியாமல் போனது?
எடப்பாடி பழனிசாமி பேச்சின் எதிரொலி
இப்படி அவர் பேசியதன் விளைவு, அடுத்த சில நாள்களில் துறையூர் பிரச்சாரத்திற்குச் செல்லும்முன், கூட்டப்படிருந்த அவரது கட்சியினரின் தாக்குதல் – வன்முறைக்குக் காரணியாகவும் மாறிவிட்டதே!
கட்சிகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, மனிதநேயத்துடன் இதுபோன்ற பிரச்சினைகளைச் சரியான முறையில் அணுகவேண்டும்!
தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்!
அவர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்தி கள் சில:
- தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் பேசும்போது, பக்கத்தில் மசூதிகளில் தொழுகை நடந்தால், அதன் ஒலி முடியும்வரை, பேச்சை நிறுத்தி விடுவர்; பிறகு தொடர்வது வாடிக்கை.
- பெரியார், கழகப் பேச்சாளர்கள் பேசிக் கொண்டி ருக்கும்போது, ‘‘சாமி ஊர்வலம்’’ வந்தால், அந்த ஊர்வலம் பொதுக்கூட்டத்தைக் கடந்து செல்லும்வரை, அமைதியாக வழிவிடும்படி பொதுமக்களையும், கூட்டத்தில் அமர்ந்துள்ளவர்களையும் கேட்டுக் கொள்வார்கள். அவர்களைப்பற்றி பேச்சாளர்கள் எவரும் தரம் தாழ்ந்துப் பேசும் பழக்கம் கிடையாது.
அண்ணா பெயரில் கட்சி நடத்துவோர் தெரிந்துகொள்ளவேண்டும்!
முதுபெரும் திராவிட இயக்க முன்னோடி தோழர் என்.வி.நடராசன் அவர்கள், சென்னை கடற்கரையில் ஒருமுறை ஆத்திரத்தில் பேசியபோது, அறிஞர் அண்ணா, அவரை உடனடியாக மன்னிப்புத் தெரி வித்துப் பேசுமாறு, மேடையிலேயே தெரிவித்தார். உடன் அது நடந்தது.
அந்த அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதன் பொதுச்செயலாளர், இப்படி திடீர் ஆவேசத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சைப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல!
கூடா நட்பின் தேடா விளைவு போலும்!
மற்றொன்றும் நம் நினைவுக்கு வருகிறது.
ஆம்புலன்ஸ் வண்டியில் பணம் – நினைவிருக்கிறதா?
சென்ற தேர்தல் காலத்தில், ஆம்புலன்ஸ் வண்டி யில் பணம் அடுக்கிக் (கரூர் அருகில்) கொண்டு செல்கின்றபோது பிடிபட்டதும், அப்போதும் பா.ஜ.க. – அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தயவு டன்தான், நடவடிக்கையே இன்றித் தப்பித்தனர்.
ஆம்புலன்ஸ்கள் ஆளில்லாமல் செல்லும் நிலை இப்போது உண்டு என்பதும், எடப்பாடி பழனிசாமிக்கு நினைவூட்ட வேண்டிய முக்கியச் செய்தியாகும்.
நா காக்க! மக்கள் நலம் காக்க!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.8.2025