சிறிநகர், ஜூன் 4 – இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் தெரிவித்து அவரை கைது செய்யக்கோரி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள், கடந்த 30.5.2023 அன்று தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அறிவித்து போராடினர். இதையடுத்து அவர்களின் போராட்டம் முடக்கப்பட்டது.
மேனகா காந்தி
இந்த நிலையில் பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தி, ‘மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வெற்றி பெறும், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படுவார்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். விலங்குகள் மீதான அன்பை வலியுறுத்தும் ‘இணைந்து வாழ்வோம்’ விழாவில் பங்கெடுப்பதற்காக சிறீநகர் வந்த அவர் செய்தியாளர்களிடம் இந்த கருத்தை தெரிவித்தார்.
பிரீதம் முண்டே
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரீதம் முண்டே ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “பெண் வீராங்கனைகளின் புகார்களை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நிகழ்வு ஜனநாயகத்தில் கவனத்தில் கொள்ளப்படா விட்டால் வரவேற்கப்படாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பிரீதம் முண்டே கூறினார்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அல்ல, பிறப்பால் பெண் என்பதால் எந்த பெண்ணின் புகாரையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதைக் கவனத்தில் எடுத்து ஆராய்ந்து, அது சரியா தவறா என்பதை விசாரணைக் குழுவோ அல்லது விசாரிக்கும் அதிகாரம் பெற்றவர்களோமுடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், பெண்களின் புகார்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், உண்மை, பொய் எதுவாக இருந்தாலும் அது விரைவில் உலகத்தின் முன் வர வேண்டும் என நினைக்கிறேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரீதம் முண்டே, பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.