சென்னை, ஆக.25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.8.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் 2025-2026ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டுக்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவி, அதன்மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல், ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கிடும் வகையிலும், இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் இக்கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்குவதற்காகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்குக் குறைந்த கட்டணத்தில், ஓர் ஆண்டு இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) வழங்குவதற்காகவும் சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றண்டு நூலகம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் “சென்னை இதழியல் கல்வி நிறுவனம்” அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை இதழியல் கல்வி நிறுவனத் திற்காக 7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post Graduate Diploma in Journalism) இந்த கல்வியாண்டு முதல் (2025 2026) தொடங்கப்படுகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது. இந்த அனுபவம், நொடிக்கு நொடி மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் அடுத்த தலைமுறையினர் தங்களைத் தயார் செய்துகொள்ள உதவும்.
இதழியல் கல்வியைச் சிறப்பாக வழங்கவுள்ள, சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து, இக்கல்வி நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியர்களிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
பின்னர் முதலமைச்சர் மூத்த ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது சென்னை இதழியல் பயிற்சி நிறுவனத்தின் சிறப்பையும், தனித்தன்மையையும், புதிய தொழில்நுட்பங்களையும், சமூகநீதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப் பட்டிருப்பதையும் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், சென்னை இதழியல் நிறுவனத்தின் சிறப்பு பணி அலுவலர் எஸ்.ஏ.ராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்தியநாதன், மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுத் தலைவர் என். ரவி. தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் இமையம், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத் துறையை சார்ந்த நக்கீரன் கோபால், ப.திருமாவேலன், கார்த்திகைச் செல்வன், சுரேஷ் குமார், குணசேகரன், சமஸ், லட்சுமிசுப்பிரமணியன், காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழக்குரைஞர் காந்தி உள்ளிட்ட ஊடகவியலாளர்களும், அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இத்தகையதொரு, ஊடகப் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று மறைந்த ‘முரசொலி’ செல்வம் படத் திறப்பின்போது (அக்டோபர் 21, 2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.