பி.பி. மண்டல் : சமூக நீதியின் சிற்பி பிறந்தநாள் இன்று (25.08.1918)

4 Min Read

 ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட பி.பி. மண்டலின் சிலையை, 12.02.2023 அன்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார்.

பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி. பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியவர். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அந்த ஆணையம் இவரது பெயராலேயே மண்டல் கமிஷன் என அழைக்கப்படலாயிற்று. இவரது அறிக்கை, இந்தியாவில் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களை முழுவதுமாக மாற்றி அமைத்தது.

இந்நாள் - அந்நாள்

பி. பி. மண்டல், 1952 முதல் 1972 வரை பல்வேறு காலங்களில் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.

இவர் 1968-ம் ஆண்டு பீகாரின் முதலமைச்சராகவும் சில காலம் பதவி வகித்தார். அரசியல்வாதியாக இவர் தனது சமூக நீதிக் கொள்கைகளுக்காகவும்,   பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

மண்டல் ஆணையத்தின் உருவாக்கம்

1979-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசு மண்டல் அவர்களை இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமித்தது. இதற்கு முன்னதாக, 1953-ம் ஆண்டு காக்கா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைக்கே வராத நிலையில், மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினரை அடையாளம் காண்பதும்,  அவர்களுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை பரிந்துரைப்பதுமாகும்.

மண்டல் ஆணையத்தின்
அறிக்கையும் பரிந்துரைகளும்

மண்டல் ஆணையம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, தனது அறிக்கையை 1980-ல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை சுமார் 52% என்றும்,  3,743 வெவ்வேறு ஜாதிகளைப் பிற்படுத்தப்பட்டோராகவும்  ஆணையம் கண்டறிந்தது.

ஒன்றிய, மாநில அரசு வேலைகளில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இதன் மூலம், ஏற்கனவே உள்ள தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து, மொத்த இட ஒதுக்கீடு 50% ஆக உயரும்.

மண்டல் ஆணையத்தின் அறிக்கை 1980-ல் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்து வதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. 1990-ஆம் ஆண்டு, வி. பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, ஒன்றிய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஆணையம் தனது பரிந்துரைகளை வழங்கினாலும், அதைச் செயல்படுத்த வைக்க வேண்டியது பெரியார் இயக்கத்தின் கைகளில் தான் இருக்கிறது என்று பி.பி. மண்டல், பெரியார் திடலில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அதற்கேற்ப மண்டல் ஆணையத்தின் பரிந்துரை களை நாடாளுமன்றத்தில் வைக்கவும், பின்னர் அதனைச் செயல்படுத்தவும் திராவிடர் கழகம் 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும் நடத்தி மக்களைத் திரட்டி அரசை அதனை நோக்கி நகர்த்தியது.

மண்டல் ஆணையத்தின் அறிக்கை, இந்திய அரசியலிலும், சமூகத்திலும் ஒரு புதிய அத்தியா யத்தைத் தொடங்கியது. இன்றும் மண்டல் காற்று பலமாக வீசிக் ெகாண்டிருக்கிறது.

திருவாரூர் – 15–ஆவது நீதிக்கட்சி மாநில மாநாடு நடைபெற்ற நாள் (24,25.8.1940)

1940-கள், தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நீதிக்கட்சி தனது செல்வாக்கை இழந்து, தேக்க நிலையில் இருந்தபோது, தந்தை பெரியாரின் தலைமை, அந்தக் கட்சியை ஒரு புதிய பாதையில் இட்டுச் சென்றது. இந்த காலகட்டம், திராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றது முதல், நீதிக்கட்சி ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது வரை பல முக்கிய நிகழ்வுகளுக்குச் சாட்சியாக அமைந்தது.

 நீதிக்கட்சியின் திருப்புமுனை மாநாடு:
திருவாரூர் (1940)

1940 ஆகஸ்ட் 24 அன்று திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15-ஆவது மாநாடு, கட்சியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது. இந்த மாநாட்டில், தந்தை பெரியார் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான முழக்கம், “திராவிட நாடு திராவிடருக்கே” என்பதாகும். இது வெறும் கோரிக்கை அல்ல, திராவிடர்களின் கலை, கலாச்சாரம், நாகரிகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சென்னை மாகாணத்தை பிரிட்டிஷ் இந்தியாவுக்கான அமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் ஒரு தனிநாடாகப் பிரிக்க வேண்டும்’’ என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுக்கவும், பெரியார் தலைமையில் முனி கன்னையா (நாயுடு), கி.ஆ.பெ. விசுவநாதம், டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன், பி.டி. ராஜன், ராஜா சர். முத்தையா (செட்டியார்) உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை பி. பாலசுப்பிரமணியம் முன்மொழிய, அறிஞர் அண்ணா மற்றும் சி. பாசுதேவ் ஆகியோர் வழிமொழிந்தனர்.

ஏற்ெகனவே நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியப் பெருமைகளை உணர வழி வகுத்திருந்தது. போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் உயிர்த் தியாகங்கள், திராவிட இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பெரும்  ஆதரவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பின்னணியில், திராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக, 1941 ஜூலை 1 ஆம் தேதி திராவிட நாடு பிரிவினை நாள் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அறிஞர் அண்ணாவின் உணர்ச்சிப்பூர்வமான உரைகள், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில், திராவிட நாடு கொள்கைக்கான ஆதரவை மேலும் அதிகரித்தன.

சாமான்யர்களின் கட்சி

நீதிக்கட்சி என்றால் பெரிய சீமான்கள் மற்றும் மிராசுதாரர்களின் கட்சி என்றிருந்த பொதுவான தோற்றத்தை   பெரியாரின் தலைமை மாற்றியது. சாமான்ய மக்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து, அவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டார்.  இந்தச் செயல்பாடுகள், முயற்சிகள், நீதிக்கட்சி ஒழிந்துவிட்டது என்று நினைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும், பழமை விரும்பிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தின.

மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நீதிக்கட்சிக்கு ஆதரவு பெருகியது. தந்தை பெரியார் தலைமை  நீதிக்கட்சியை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *