அமித்ஷாவின் கூற்று ஒரு வகையில் எதிர்க்கட்சி வேட்பாளரின் சிறப்பை மற்றவர்கள் அறிய பெரிதும் உதவும்!

3 Min Read
* குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியை நக்சலைட் ஆதரவாளர் என்பதா? 
* கடந்த 6 ஆண்டுகளாக மக்களவையில் துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாதது ஏன்?
அறிவுத் துறையிலும், மனித உரிமை, சமூகநீதிக்காகவும் குரல் கொடுப்பவர்களைத் தண்டித்து, சிறுமைப்படுத்துவது நாகரிகமல்ல!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற  எதிர்க்கட்சி வேட்பாளரும், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியு மாகிய சுதர்சன் (ரெட்டி) அவர்களை ‘நக்சலைட்’ ஆதரவாளர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது உகந்ததல்ல; ஒரு வகையில், நீதிபதியின் சிறப்பை மக்கள் அறிவதற்கான வாய்ப்பே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியக் குடியரசின் துணைத் தலைவர், மாநிலங்கள வைக்கான தலைவர் பதவிக்கான (செயற்கையாக உருவாக்கப்பட்ட) தேர்தல் 9.9.2025 அன்று நடைபெற விருக்கிறது.

2026 இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திரட்ட பி.ஜே.பி.யின் யுக்தி!

தேசிய ஜனநாயக முன்னணி (NDA) (தமிழ்நாட்டைச் சார்ந்த) திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களை வேட்பாள ராக நிறுத்தியது. ‘தமிழர்’ என்ற தூண்டிலைக் காட்டி, 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், வாக்கு களைத் திரட்ட ஒரு வகையான குயுக்தியான உத்தி என்பது பல வட்டாரங்களில் பேசுபொருளாய் பகிரங்கப்பட்டுள்ளது!

இந்தியா கூட்டணி சார்பில், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியான – ஆந்திராவைச் சேர்ந்த ஜஸ்டிஸ் சுதர்சன் (ரெட்டி) அவர்கள் ஜனநாயகத்திற்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தவிர்க்கும் நோக்கோடு, வெற்றி – தோல்விபற்றிக் கவலைப்படாது, வேட்பாளராகக் (கொள்கை அடிப்படையில்) களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்!

அவரைப்பற்றிக் கருத்துக் கூறும்போது, ‘‘அவர் ஒரு நக்சலைட் ஆதரவாளர்’’ என்று நீதிமன்றத்தில் அவரது அமர்வு தந்த ஒரு வழக்கின் தீர்ப்பை வைத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கூற்று, எவ்வளவு தவறானது, தரக்குறைவானது, உள்நோக்கம் கொண்ட விமர்ச னம் என்பதை உண்மை ஜனநாயகவாதிகள் அறிவார்கள்.

எதிர்க்கட்சி வேட்பாளரின் கண்ணியமான பதில்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு  மிகவும் கண்ணியமான வகையில், வேட்பாளர் சுதர்சன் (ரெட்டி) பதிலளித்து, ‘‘அந்தத் தீர்ப்பு – சட்டப்படி தரப்பட்ட ஒரு தீர்ப்பு; அத்தீர்ப்பினை எழுதியது நான் என்றாலும், அத்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அந்த அமர்வு நீதிபதிகள் அனைவரும் ஒப்புக்கொண்டு கையொப்பம் போட்டு அளித்த தீர்ப்பு’’ என்று நாசூக்காகத் தலையில் குட்டுவதுபோல், சுட்டிக்காட்டியுள்ளார். ‘‘அதற்குமேல் நான் அதனை விவாதப் பொருளாக்க விரும்பவில்லை’’ என்று கூறியிருப்பது – எதிர்க்கட்சிகள் (இந்தியா கூட்டணி) வேட்பாளர் எவ்வளவு பெருந்தன்மைமிக்கவர், நாகரிகம், கண்ணியம் நிறைந்தவர் என்பதற்கான தக்க சான்று அல்லவா? உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருப்பதும் முக்கியமாக வரவேற்கத்தக்கதாகும்.

மேலும், ‘யார் எழுதியது என்றே தீர்ப்பில் குறிப்பிடப்படாத அயோத்தி தீர்ப்பு போன்றதல்ல, மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் சுதர்சன் (ரெட்டி) எழுதிய தீர்ப்பு’ என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கதாகும்.

அறிவுத் துறையிலும், மனித உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் குரல் கொடுப்பவர்களை எல்லாம், திட்டமிட்டே குற்றவழக்குகளில் கைது செய்து, தண்டனை வாங்கிக் கொடுப்பது, பிணை வழங்கக்கூட அரசு சார்பில் கடும் ஆட்சேபணை தெரிவிப்பது, சிறுமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் சர்வ சாதாரணக் காட்சிகளாக நடைபெறுகின்றன!

ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, அமித்ஷாக்களின் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாமலேயே மக்களவை நடப்பது எப்படிப்பட்ட ஜனநாயகப் பண்பு என்று உலகுக்கே தெரிகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (சென்சஸ்) ஜாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரியவர்களைக்கூட ‘அர்பன் நக்சல்கள்’ (Urban Naxals) என்று இவர்கள் பொத்தாம் பொதுவில் கூறியதும் உண்டு.

‘ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை’ என்று பிறகு தனது நிலைப்பாட்டை தலைகீழாக (பீகார் தேர்தலுக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ) மாற்றி, ‘யூடர்ன்’ அடிப்பதற்குமுன் மேற்கண்டவாறு கூறியதை நாடும், மக்களும் மறந்துவிட முடியுமா?

அதே ராகத்தை – வித்தையைத்தான் வேட்பாளர் ஜஸ்டிஸ் சுதர்சன் (ரெட்டி)க்கு எதிராக வாசிக்கிறார்கள்.

அமித்ஷா ஒரு வகையில் உதவியுள்ளார்!

அவரது தகுதிபற்றியோ, வேறு காரணங்களையோ கூற முடியாததே, இந்தியா கூட்டணி நிறுத்தியுள்ள வேட்பாளரின் பெருமை அல்லவா? நீதித்துறையில் சார்பற்ற தீர்ப்பு வழங்கியவர் என்பதால், அவரது சிறப்பை மற்றவர்களும் அறிய, அமித்ஷாவும் உதவியுள்ளார் என்பதும் உலகுக்கு வெளிச்சமாகும் என்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்வார்கள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை 
25.8.2025  

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *