புதுடில்லி, ஆக.24- நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி வசூலிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுதரி எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்: நிகழ் நிதியாண்டில் செஸ் வரி மூலம் ரூ.4.18 லட்சம் கோடியும், கூடுதல் வரி மூலம் ரூ.1.72 லட்சம் கோடியும் வசூலிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இது கடந்த நிதியாண் டில் வசூலிக்கப்பட்ட செஸ் வரி ரூ.3.87 லட்சம் கோடி, கூடுதல் வரி ரூ.1.53 லட்சம் கோடி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் 9.4 சதவீதம் அதிகம்.
ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட சில தேவைகளுக்கு செஸ் மற்றும் கூடுதல் வரி வசூல் பயன்படுகிறது.
இத்தகைய செலவினங்களின் பலன்கள் மாநிலங்களுக் கும் கிடைக்கும்’ என்றாா்.
மற்றொரு கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘கடந்த நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி மூலம், ஒன்றிய அரசு ரூ.83,071 கோடியை திரட்டியது.
இது 2023-2024ஆம் நிதியாண்டில் ரூ.69,891 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.60,616 கோடியாக இருந்தது’ என்றாா்.