செய்திச் சுருக்கம்

3 Min Read

சிறுபான்மையினருக்கு நெருக்கடி:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகி யுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒன்றிய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

மீண்டும் சரிவைக் கண்ட சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிந்து 81,622 புள்ளிகளிலும், நிஃப்டி 111 புள்ளிகள் சரிந்து 24,966 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.

எச்டிஎப்சி, அய்சிஅய்சிஅய், ரிலையன்ஸ், விப்ரோ, நெஸ்லே உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. நேற்று (22.8.2025) உயர்வில் இருந்த நிலையில், மீண்டும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

என்ன செய்யப் போகிறது அ.தி.மு.க.?

அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கருத்து. இந்த மோதல்போக்கு சில காலம் தணிந்திருந்த சூழலில், நெல்லையில் பேசிய அமித்ஷா மீண்டும் குண்டை தூக்கி போட்டுள்ளார். கூட்டணி ஆட்சிதான் அமையும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை…

தமிழ்நாடு அரசு புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப் பித்துள்ளனர். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28ஆம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசுத் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15இல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

உங்களின் ரோல் மாடல்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் என்று மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சென்னை ‘குட் ஷெப்பர்ட்’ பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், கைபேசிகளில் ரீல்ஸ் பார்ப்பதெல்லாம் ரியாலிட்டி அல்ல. லைக்ஸ்கள் பெறுவதில் அல்ல, படித்து மதிப்பெண், பட்டம் பெறுவதுதான் கெத்து என்றார். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அம்சம் தானே தவிர, அதுவே வாழ்க்கையல்ல என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ரூ.64,000 ஊதியம் … 10,270 காலியிடங்கள்

வங்கி (அய்பிபிஎஸ்) கிளார்க் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக. 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள 10,270 கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு தேர்ச்சி, வயது: 20-28, முதல்நிலை & முக்கிய (பிரிலிமினரி & மெயின்) தேர்வுகள் அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும்.

கிறுக்குத்தனத்திற்கு அளவே இல்லையா?

புராணங்களின் படி, பார்வதி நீராடச் சென்றபோது, வெளியே விநாயகர் காவலுக்கு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவனை, விநாயகர் உள்ளே செல்ல விடாமல் தடுக்க, கோபமடைந்த சிவன் விநாயகரின் தலையைத் துண்டித்தார். தலை துண்டிக்கப்பட்ட இடமாக கருதி, உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் முன்கடியா என்ற கிராமத்தில் தலையில்லாத விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *