கொழும்பு, ஆக.23- இலங்கை மேனாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை ஆகஸ்ட் 26 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அந்த ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்து சென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியான பேராசிரியர் மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த பயணத்திற்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்கே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில் அரசு நிகழ்ச்சியை முடித்த பின்னர் ரணில் அங்கிருந்து இங்கிலாந்து திரும்பியுள்ளார். தனது மனைவியின் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு செலவில் இங்கிலாந்து சென்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் அவரது ஊழியர்களிடம் பயணச்செலவு குறித்து ஏற்கெனவே சிஅய்டி அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை தொடர்பான வாக்கு மூலத்தை பதிவு செய் வதற்காக ரணில் குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்துக்கு வரும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று (22.8.2025) அங்கு வந்த மேனாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் சிஅய்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆனால் ரணிலின் பதில் திருப்தியளிக்காத நிலையில் அதிகாரிகள் அவரை கைது செய்துள் ளனர். பின்னர் அவர் கொழும்புவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கேவை ஆகஸ்ட் 26 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.