குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆந்திரா – தெலங்கானா எம்.பி.க்கள் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுகிறது! சிவசேனா கட்சி எம்.பி. கூறுகிறார்

1 Min Read

மும்பை, ஆக.23- குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு சாதகமாக வாக்களிப்பார்களா? அல்லது என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குதான் ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக் கூடும் என தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுவதாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான UPA வேட்பாளர் பிரதிபா பாட்டீலை 2007ஆம் ஆண்டு குடியரசத் தலைவர் தேர்தலின்போது ஆதரித்தது. ஏனென்றால், அவர் மகாராட்டிராவில் இருந்து வந்தவர். ஆந்திரா மற்றும் தெலங்கானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் என என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) பயப்படுகிறது.

கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான டூப்ளிக்கேட் சிவசேனா மூலம் கிராஸ் வோட்டிங் விழும். பேப்பரில் என்டிஏ கூட்டணி மெஜாரிட்டியாக உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளார். ஆந்திரா, தெலங்கானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. ராகுல் காந்தி நாட்டிலும், பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் உருவாக்கிய சூழ்நிலை காரணமாக, கிராஸ் வோட்டிங் விழ வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *