மும்பை, ஆக.23- மகாராட்டிராவில் விநாயகன் விழாவை முன்னிட்டு, விநாயகன் சிலைக்கு ரூ.474 கோடியில் மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு இன்சூரன்ஸ் செய்துள்ளது. விநாயகன் விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களிலும் இந்த விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், விநாயகன் விழாவையொட்டி, மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு, இந்த ஆண்டு ரூ.474 கோடியில் (இன்சூரன்ஸ்) காப்பீடு செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.400 கோடிக்கு காப்பீடு செய்த நிலையில், இந்த ஆண்டு தொகை சற்று அதிகரித்துள்ளது. விநாயகன் சிலைகளைஅலங்கரிக்கும் தங்க மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு உயர்வு, அதிக தன்னார்வலர்கள், பூசாரிகள், சமையல்காரர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இந்தக் காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதே இவ்வளவு பெரிய தொகைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கி யுள்ள இந்த ‘ஆல்-ரிஸ்க்’ காப்பீடு திட்டமானது, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள கற்கள், தனிப்பட்ட விபத்துக் காப்பீடு, தீ மற்றும் பூகம்பப் பேரிடர் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.நகைகளுக்கான ‘ஆல்-ரிஸ்க்’ காப்பீட்டு மட்டுமே இந்த ஆண்டு ரூ. 67 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 இல் ரூ. 43 கோடியாகவும், 2023 இல் ரூ. 38 கோடியாகவும் இருந்தது. இதில் 375 கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீடு தொடர்புடையது. இதில் பூசாரிகள், பக்தர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் அடங்குவர். பொதுமக்களுக்கான சொத்து காப்பீடு 30 கோடி ரூபாய். ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் தலைவர் அமித் பாய் கூறுகையில், ‘தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு உயர்வே இதற்கு முக்கிய காரணம். தன்னார்வலர்கள் மற்றும் பூசாரிகளும் காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.