ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 16 “வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்த மருத்துவம்!”

13 Min Read

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தின் அருகில்தான், 8 கி.மீ. தொலைவில் தான் காவிரி ஆறு தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. காவிரி ஆற்றின் ஒரு கரை தமிழ்நாடு. எதிர்க் கரை கருநாடகம். அந்தக் கிராமத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்ட, கீழ்நிலை ஜாதியில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் அந்தச் சிறுவன். அவனது தந்தையாரும், தாயாரும் செல்வந்தர்களாக இல்லாவிட்டாலும், கொள்கைப் பிடிப்பில் பெரும் செல்வர்களாக இருந்தனர். அவனது தந்தையார் பெரியார் அய்யாவின் அணுக்கத் தொண்டராக இருந்தவர். அவர் இணையரும் அவர் வழியே தந்தை பெரியாரிடம் மிகவும் அன்பும், மரியாதையும் கொண்டவர். அந்தச் சிறிய கிராமத்தில் தந்தை பெரியாரைப் போற்றும் குடும்பமாக அந்தக் குடும்பம் இருந்ததால், மற்ற உறவினர்களால் புறக்கணிப்புக்கும், ஒதுக்குதலுக்கும் ஆளானது.

அந்த இணையருக்கு திருமணம் ஆகி, பத்தே நாட்களில் தந்தை பெரியார் அறிவித்த ஹிந்தி எதிர்ப்புப் போரில் அந்தச் சிறுவனின் தந்தை ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர். அவருக்கும், அவரின் இணையருக்கும் பிறந்த முதல் குழந்தைதான் அந்தச் சிறுவன். பெருமையோடும், மகிழ்ச்சியோடும் தந்தை பெரியாரிடம் கைக்குழந்தையைக் கொடுத்துப் பெயரிடச் சொல்லினர் பெற்றோர். தந்தை பெரியாரும் அந்தக் கைக்குழந்தைக்குப் பெயரிட்டார். இயக்கமே வாழ்வியல், தந்தை பெரியாரே தலைவர் என்ற உணர்வையும், பாலையும் ஊட்டி வளர்த்தார் அந்தக் குழந்தையின் தாயார். குழந்தை வளர்ந்து சிறுவனாக வளர்ந்த காலகட்டம். சிறுவன், கல்வி வள்ளல் காமராசர் அருட்கொடையால், அந்த ஊரில் உள்ள சிறிய பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டான். அப்பொழுது ஒரு திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தை அவன் தந்தை ஏற்பாடு செய்தார். தந்தை பெரியார் அந்தக் கூட்டத்திற்கு வந்தார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

படத்தில் ஜன்னல் ஓரமாக நிற்பது சிறுவன் கவுதமன். அய்யாவின் பக்கத்தில் நிற்பது அவனின் பெரியப்பா ஜனகவேல், அதற்கு அடுத்தவர் கவுதமனின் தந்தை பென்னாகரம் இராமமூர்த்தி.

அந்தச் சிறிய கிராமத்தில் தங்கும் விடுதி எல்லாம் கிடையாது. பஞ்சாயத்து பயணியர் தங்கும் விடுதிதான்! தந்தை பெரியாரை, அங்கு தங்க வைத்தனர். சிறுவனின் தந்தையின் வீட்டிலிருந்துதான் பெரியார் அய்யாவுக்கு உணவு சென்றது. அவனின் தந்தையும், தாயும் அந்தச் சிறுவனுக்கு ஒரு கருப்புச் சட்டையை மாட்டி, உணவை எடுத்துச் செல்லும் பொழுது, தந்தை பெரியாரிடம் அழைத்துச் சென்றனர். போகும் பொழுதே, “அங்கே ஒரு தாத்தா இருப்பார். அவரைப் பார்த்ததும் ‘வணக்கம்’ என்று சொல்ல வேண்டும்” என்று ஒன்றாம் வகுப்புப் படிக்கும் அந்த சிறுவனுக்கு சொல்லிக்கொடுத்து அழைத்துச் சென்றனர் அவன் பெற்றோர். தந்தை பெரியாரை பார்த்த உடன் அவன் பெற்றோர் கூறியபடி, “வணக்கம் தாத்தா” என்றான் அவன். பெரியார் அய்யா, பதிலுக்கு வணக்கம் கூறி, அந்தச் சிறுவனின் முதுகைத் தட்டிக் கொடுத்துப் “படிக்கிறியா” என்று கேட்டார். “ஆமாங்கத் தாத்தா ஒன்னாங்கிளாஸ் படிக்கிறேன்” என்றான் அவன். “நல்லாப் படிக்கோணும்” என்று தந்தை பெரியார் பதிலுக்கு அவனிடம் சொன்னார். “சரிங்க தாத்தா” என்ற சிறுவன் சற்று ஒதுங்கி நின்று கொண்டு அய்யாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

கட்டுரை, ஞாயிறு மலர்

அன்னை மணியம்மையாருடன்
கவுதமனின் தாயார் சாந்தா அம்மையார்

அவன் அம்மா அய்யாவுக்கு உணவு பரிமாறினார். பெரியார் அய்யா மகிழ்ச்சியோடு உணவு உண்டார். அவர் உண்ணுவதை எட்ட நின்று பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். சாப்பிட்டு முடித்த உடன் அந்தச் சிறிய ஊரில் இருந்த இயக்கத் தோழர்களும், பொது மக்களும் பெரியார் அய்யாவைப் பார்க்க வந்தனர். அய்யா அவர்களிடம் உரையாடுவதையும், உறவாடுவதையும் பிரமிப்போடும், பெருமையோடும், மகிழ்ச்சியோடும், சாளரத்தின் ஓர் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டேயிருந்தான் அந்தச் சிறுவன். மனம் கொள்ளாத மகிழ்ச்சி அவனுக்கு. நாட்கள் நகர்ந்தன. ஆண்டுகள் உருண்டன. சிறுவன் வளர்ந்தான். ஆசிரியப் பெருமக்கள் அவனுக்குக் கல்விக் கண்களை கொடுத்தப் பருவத்தில் அவனது பெற்றோர் கொள்கைக் கண்களைக் கொடுத்தனர். உணவு உண்ணும்போது அவனது பெற்றோர் பெரியார் அய்யாவைப் பற்றியும், அன்னை மணியம்மையார் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட புரட்சியையும் சமூக மாற்றங்களைப் பற்றியும் உன்னிப்பாகக் கேட்பான் அந்தச் சிறுவன்.

இரவு உணவிற்கு முன், அவன் தந்தை கேட்கும் கேள்வி, “என்னடா, இன்று ‘விடுதலை’ படிச்சியா?” என்பதுதான். ஆரம்பத்தில் அப்பா கேட்பாரே என்பதற்காகத்தான் ‘விடுதலை’யைப் படிக்கத் துவங்கிய அந்தச் சிறுவன் நாளடைவில் அதில் உள்ளக் கருத்தாழமிக்கச் செய்திகளை ஆர்வத்துடன் படிக்கத் துவங்கினான். இப்பொழுது அவன் பத்தாம் வகுப்பு மாணவன். அவனும் வளர்ந்தான். ‘விடுதலை’யால் அவன் பகுத்தறிவும் வளர்ந்தது. அந்தச் சமயம், அந்தக் கிராமத்தில் திராவிடர் கழகக் கூட்டம். தந்தை பெரியார் வந்தார். இந்த முறை தந்தை பெரியார் அந்தச் சிறுவனின் இல்லத்திலேயே தங்கினார். விடலைப் பையனாக வளர்ந்த அவனுக்கு இப்பொழுது பதினைந்து வயது. பத்தாம் வகுப்பு மாணவன். அது 29.5.1964 அன்று தந்தை பெரியார் வருகிறாரென்று அந்த இளைஞனின் தந்தை, அய்யா ஓய்வெடுக்க படுக்கைகள், உட்கார சாய்வு நாற்காலி போன்ற பொருள்களை “அன்பகம்” என்ற பெயர் கொண்ட அந்த வீட்டின் கூடத்தில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான ‘எள்ளு ஒப்பிட்டு’, ‘முறுக்கு’ என்றெல்லாம் அந்த இளைஞனின் அம்மா முன்னதாகவே செய்து வைத்திருந்தார். வீட்டில் ஒரே விழாக்கோலம். அன்று வீட்டில் அய்யாவுக்கும், மற்ற இயக்கத் தோழர்களுக்கும் கறிவிருந்து. மாலை பொதுக் கூட்டம். சிங்கமென முழங்கிய அய்யாவின் முழக்கத்தை ஒரு சொல் விடாமல் உள்வாங்கிக் கேட்டான் அந்த இளைஞன். அந்தப் பேச்சு அவனை ஈர்த்த கொள்கைப் பயிருக்கு உரமிட்டு, நீர் பாய்ச்சியது போல் அமைந்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

கவுதமனின் தாயார் சாந்தா அம்மையார், ஆசிரியர் அய்யாவுடன்.

பள்ளி இறுதியாண்டு. அந்த இளைஞன் படிப்பில் ஆர்வமுடையவனாய் இருந்ததால் இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தான். அவனுக்கு சென்னை கிருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. புகுமுகவகுப்பு (P.U.C)இல் சேர்ந்தான் அவன். அவனுக்கும், அவன் பெற்றோர்க்கும் M.B.B.S. படிப்பில் சேர்ந்து அவன் மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு. அத்தனை ஆண்டுகள் தமிழிலேயே படித்து வந்த அந்த இளைஞனுக்கு ஆங்கில வழிக் கல்வியில் அனைத்தும் இருந்தது மிகவும் சிக்கலாகிப் போனது. அதனால் அவன் எதிர்பார்த்தபடி மதிப்பெண்கள் பெற முடியவில்லை.

அது 1967ஆம் ஆண்டு. காங்கிரஸ் ஆட்சியின் பதவி போய், அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமைந்த ஆண்டு. மருத்துவக் கல்லூரியில் சேர குறைந்தளவு 50 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால் அந்த இளைஞன் எடுத்ததோ 55 மதிப்பெண்கள்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும், கிராமப்புற மாணவனுக்கு ஆங்கில வழிக் கல்வியால் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. திடீரென்று அரசாணை ஒன்று வெளியானது. மருத்துவக் கல்லூரியில் சேர குறைந்தளவு தகுதி மதிப்பெண்கள் 60 ஆக இருந்த வேண்டும் என்பது. அப்பொழுது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர் குறைந்தளவு மதிப்பெண்களை அதிகப் படுத்தியது கிராமப்புற, ஏழை மாணவர்களை எப்படி பாதிக்கும் என்பதை விளக்கி, ‘விடுதலை’யில் தலையங்கம் எழுதினார். முதலமைச்சர் அண்ணா அவர்கள் அந்த தலையங்கத்தைப் படித்து விட்டு, மீண்டும் தகுதி மதிப்பெண்களை 50 ஆகவே மாற்றிவிட்டார். 1967இல் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தின் தாக்கம் 55 ஆண்டுகளாக இன்றுவரை நீடிக்கிறது. தொழிற் கல்லூரிகளில் சேர குறைந்தளவு மதிப்பெண்கள் இன்றளவும் 50 ஆக நீடிக்கிறது.

இதனால் இலட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் தொழிற் கல்வியில் சேரும் வாய்ப்புகளும், கனவுகளும் நிறைவேறின. ‘சமூகநீதி’யில் இந்த நிகழ்வு ஒரு பெரிய “மைல் கல்” என்றால் மிகையாகாது. “யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்று நமக்கு சொல்லித் தந்த ஆசிரியர் அய்யா அவர்கள். உண்மையைச் சொல்லப் போனால், “யாராலும் முடியாதது அவரால் மட்டும்தான் முடியும்!”

மருத்துவக் கல்லூரியின் நேர்முகத் தேர்வு. மருத்துவக் கனவில் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற அந்த இளைஞனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவனது மதிப்பெண்கள் குறைந்ததால் அவனுக்கு MBBS படிப்பில் இடம் கிடைக்கவில்லை.

சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவும், அவனை மருத்துவனாக்கி பார்க்க வேண்டும் என்ற அவனது பெற்றோர் கனவும் சிதைந்து, சின்னா பின்னமாகிப் போனது. வீட்டில் உள்ள அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி! எதிர்ப்பார்ப்பு முழுதும் ஏமாற்றமாகிப் போன சோகம். இதை எதிர்பார்த்தோ என்னவோ ஆசிரியர் அவர்கள் ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்திருந்தார். B.D.S என்ற படிப்புக்கும் அந்த இளைஞனை மனு போடச் செய்திருந்தார். அதுவரை B.D.S படிப்பு என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியாது. M.B.B.Sஇல் இடம் கிடைக்காததால் ஆசிரியர் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியில் அந்த இளைஞனை வேதியியல் இளங்கலை (B.Sc; Chemistry) படிப்பில் சேர்த்து விட்டார். ஆனால் அவர் தன் முயற்சியைக் கைவிடவில்லை.

திடீரென்று ஒரு நாள் மருத்துவக் கல்லூரி, இயக்குநர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் அந்த இளைஞனுக்கு வந்தது. அது B.D.S. படிப்பிற்கான அனுமதிக் கடிதம். ஒருவழியாக சென்னை மருத்துவக் கல்லூரியில் அவன் சேர்ந்து படிக்க ஆசிரியர் அவர்களால் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கத் துவங்கினான். பல் மருத்துவத் துறை முழுவதும் பார்ப்பன மயமாக இருந்த காலகட்டம் அது. (‘விடுதலை’யில் “பல் மருத்துவத்தில் பார்ப்பன முதலைகள்” என்ற ஒரு கட்டுரையே வந்தது).

1973ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அந்த வாலிபன் BDS படிப்பையும், பயிற்சி மருத்துவர் பணியையும் முடித்து மருத்துவர் ஆன சமயம். தந்தை பெரியார் அரசினர் பொது மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். மருத்துவம் முடித்த  அந்த வாலிபன் முதல் மாத ஊதியத் தொகையாகப் பெற்ற ரூ. 230அய் எடுத்துக் கொண்டு பெரியார் அய்யாவைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான்.

42ஆவது படுக்கைப் பகுதியில் அய்யா சேர்ந்திருந்தார்.அந்த அறைக்கு வெளியே ஒரு சாய்வு நாற்காலியில் பெரியார் அய்யா அமர்ந்திருந்தார். அந்த இளம் மருத்துவன் அந்த ரூ.230அய் பெரியார் அய்யாவிடம் கொடுத்தான். அய்யா, அவனைப் பார்த்து, “என்ன இது?” என்று கேட்டார். அந்த இளம் மருத்துவர், “அய்யா, இது என் முதல் மாத ஊதியம். உங்களிடம் கொடுக்க வந்துள்ளேன்” என்றார். பெரியார் அய்யா வாய் நிறைய சிரிப்போடு அதைப் பெற்றுக்கொண்டு, தன் சட்டைப் பையில் இருந்து ஒரு கறுப்பு நிற நாள்குறிப்பேட்டை (Diary) எடுத்து, “பென்னாகரம் ராமமூர்த்தியின் மகன் டாக்டர் கவுதமன் முதல் மாத சம்பளம் வரவு ரூ.230” என்று எழுதினார். அந்த மருத்துவன் அதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பட்டம் வாங்கியதை விட, அய்யா எழுதிய இந்த வரிகள் மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று சொல்லவும் வேண்டுமா?

சென்னை மருத்துவக் கல்லூரியில் “ஆங்கில இலக்கிய மன்றம்” இருந்தது. “மலையாளிகள் சங்கம்” என்று கூட இருந்தது. அதனால் “சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றம்” என்ற அமைப்பை நிறுவ தன் நண்பர்களோடு இணைந்து ஒரு முயற்சியை மேற்கொண்டான். அந்த நண்பர்கள் குழுவில் இருந்தவர்தான் பிறைநுதல்செல்வி. நாத்திக உணர்வும், தமிழார்வமும், திராவிட இயக்க உணர்வும் உடைய அவரின் நட்பு ஒரு நல்வாய்ப்பாக அந்த இளைஞனுக்கு அமைந்தது. (நட்பு நாளடைவில் காதலாகக் கணிந்தது. ஆசிரியர் அய்யாவே சாட்சிக் கையொப்பமிட வாழ்க்கை ஒப்பந்த விழா, வெள்ளிக்கிழமை “கொழுத்த” இராகுகாலத்தில் நடந்தது. ஜாதி மறுப்பு, தாலியற்ற, வாழ்விணையேற்பு விழா அது. (13.5.1977 அன்று நடந்த வாழ்விணையேற்பு விழாவில் மணமகளாக நின்ற மரு. பிறைநுதல் செல்விதான் பின்னாளில் திராவிடர் கழகத்தின் நான்காம் பொருளாளராக ஆசிரியர் அவர்களால் நியமிக்கப்பட்டவர்.

பல் மருத்துவத் துறையில் ஆறு உயர் படிப்புகள் உள்ளன. அதில் ஒரு பிரிவு முக அறுவை மருத்துவம். மருத்துவப் பட்டப் படிப்பான M.B.B.S.இல் சேர முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த அந்த இளைஞனுக்கு முக அறுவை மருத்துவத்தில் ஆர்வம்ஏற்பட்டது. இதற்கிடையே அரசு மருத்துவத்துறையில் உதவி மருத்துவர் பதவி கிடைத்து, நெல்லை மாவட்டத்தில், செங்கோட்டை மருத்துவமனையில் பணியில் சேர்ந்தான் அந்த இளைஞன்.(அந்தக் காலகட்டத்தில்தான் அந்த இளைஞன் – இப்பொழுது வாலிபன் “குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை”யை நெல்லை மாவட்டக் கழகத் தோழர்களோடு இணைந்து துவக்கினான். இந்த ஆண்டு 46ஆம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது.) முக அறுவை மருத்துவத் துறை ஒரு இளம் துறை. முகத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகள், நீர்க்கட்டிகள் (Gysts), கட்டிகள் (Tumours), புற்று நோய்க் கட்டிகள், முகத்தில் ஏற்படும் நோய்த்தொற்று, முகச் சீரமைப்பு போன்றவற்றை அறுவை மருத்துவம் செய்து சீராக்கும் துறை அது.

மரு.சி.கே.தனசேகரன் என்ற பேராசிரியர் – அவர்தான் இங்கிலாந்தில் பயிற்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியில் சேர்ந்தவர். இந்தியாவின் முதல் முக அறுவை மருத்துவர். அவர் செய்த அறுவை மருத்துவங்களைப் பார்த்து, தானும் அது போல வர வேண்டும் என்ற ஆர்வம் அந்த வாலிபனுக்கு. அதனால் M.D.S. முக அறுவை மருத்துவத்திற்கு மனு செய்தார்.

அந்த நேரம் பேராசிரியர் மரு. தனசேகரன் வெளிநாட்டுப் பணிக்குச் சென்று விட்டார். அந்தத் துறைக்கு தலைமை மருத்துவராக ஒரு மலையாளிப் பார்ப்பனர் வந்து விட்டார். முதல் நாள் பட்ட மேல் படிப்பில் சேர்ந்த அந்த வாலிபனை பேராசிரியர் அவர் அறைக்கு அழைத்தார். வாலிபனும் அவர் அறைக்குச் சென்றான். பேராசிரியர், “டேய், நீ கருப்புச் சட்டைக்காரன். நீ MDS பட்டமே வாங்க முடியாது. எதற்கு நேரத்தை வீணாக்குகிறாய்? ஒடிப் போயிடு” என்றார். அந்த வாலிபன், “சார், நான் படிப்பேன். என் கருப்புச் சட்டை எனக்கு என் இயக்கம் தந்தது. அதை நான் கழட்டவும் மாட்டேன். என் படிப்பை விடவும் மாட்டேன்” என்று கூறிவிட்டு வெளியேறினான். அந்த இரண்டாண்டு மேல் படிப்பு தான் அவன் வாழ்க்கையின் “இருண்ட காலம்”. சொல்ல முடியாத அளவு அவமானங்கள், கேவலப்படுத்துதல் என்றெல்லாம் அந்தப் பருவத்தில் அவன் சந்தித்தான்.

ஒரே ஒரு முறை கூட அந்தப் பேராசிரியர் அவனை அறுவை அரங்கத்திற்குள் அனுமதிக்கவில்லை. மூன்று முறை தேர்வில் அந்த வாலிபன் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தப் பேராசிரியர் ஓய்வு பெற்று போய், அடுத்த பேராசிரியர் காலத்தில்தான் முக அறுவை மருத்துவத்தில் M.D.S. பட்டம் பெற முடிந்தது.

மேல் படிப்பு முடிந்த உடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் பணி. இன்று அவன் கடந்த 40 ஆண்டுகளாக குன்னூரில் இருக்கின்றான். படிக்கும் பொழுது ஒரே ஒரு அறுவை மருத்துவத்தைக் கூட பார்க்காத அன்றைய வாலிபன், இன்றைய “மேனாள் வாலிபன்” ஏறத்தாழ 9000 முக அறுவை மருத்துவம் செய்துள்ளான். (“இவ்வளவு மருத்துவத்திலும் ஒரு சிறுதுளிதான் இதுவரை வெளிவந்த மருத்துவப் பயனாளிகள் கட்டுரைகள்). எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக 25ஆம் ஆண்டு விழாவில் “சிறந்த பல் மருத்துவர்” விருது பெற்றுள்ளான். இரண்டு முறை “வாழ்நாள் சாதனையாளர்” விருது பெற்றுள்ளான். ஏறத்தாழ இருபது முறை, மருத்துவர்கள் மாநாடுகளில் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளான்.

இன்று அந்த மேனாள் வாலிபனுக்கு வயது 75. இன்றும் அறுவை மருத்துவம் செய்து மக்கள் துயர் நீக்கும் பணியில் இருக்கின்றான். ஏளனங்களையும், புறக்கணிப்புகளையும் மீறி இன்று இந்த நிலைக்கு வர எந்த உந்துதல்கள் காரணம்? முட்டை ஓட்டில் மலத்தை வைத்து, தந்தை பெரியார் மேல் வீசினார்கள். மேலே பட்டிருந்த மலத்தை தன் சால்வையால் போர்த்தி மறைத்துக் கொண்டு, அதற்கு மேலும் இரண்டு மணி நேரம் பரப்புரையாற்றி இந்த மக்களை “மானமும், அறிவும்” உடையவர்களாக்க தன் இறுதி மூச்சுவரை போராடிய தந்தை பெரியாரை விட இந்த உலகில் கேவலப்பட்ட தலைவர் யாராவது உண்டா? அந்த தன்மானத் தலைவரை, அவர் கொள்கைகளை வாழ்வியலாகக் கொண்டதாலன்றோ இந்த சாதனைகளை அவனால் சாதிக்க முடிந்தது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு நேரமும் ஏணிப்படியாக இருந்து அவன் வாழ்க்கையை உயர்த்தி விட்டார். இன்று அவன் பெற்ற ஏற்றம் அனைத்துக்கும் காரணம் அவரே ஆவார்” நம்மால் முடியாதது யாராலும் முடியாது, வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற அவரின் வாக்கியங்கள்தான் அவனின் தாரக மந்திரம். நீதிக் கட்சி ஆட்சியின் முதலமைச்சர் இராமஇராய நிங்கர் மருத்துவக் கல்லூரிகளின் வாசல்களை ஒடுக்கப்பட்டோருக்கு திறந்து விட்டார். சமூக நீதி கைவிளக்கை தந்தை பெரியார் உயர்த்திப் பிடித்தார். அவன் போன்ற எண்ணற்ற அழுத்தப்பட்ட பல்லாயிரமவர் வாழ்வு ஒளி பெற அந்த கைவிளக்கு அன்றோ வழிகாட்டியது. இன்று வரை அந்த ஒளி அணையாது தன்னைப் பற்றியோ, தன் உடல் நிலைப் பற்றியோ கவலைப்படாது தன்முனைப்பின்றி, தன் தலைவனைப் பற்றியே நாளுக்கு ஆயிரம் முறை உச்சரிக்கும் அந்த ஈடற்ற தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களையோ நினைக்காத நேரம் அந்த மேனாள் வாலிபனுக்கில்லை என்பதே கல்மேல் எழுதிய எழுத்து.

அந்த மேனாள் வாலிபன் பெயர் மரு.இரா.கவுதமன். அவனை கருப்புச் சட்டைக்காரனாக உருவாக்கிய தந்தை பெயர் பென்னாகரம் இராமமூர்த்தி. தாயார் சாந்தா அம்மையார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *