புதுடில்லி, ஆக.22- ‘இந்தியா’ கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று (21.8.2025) தனது வேட்பு மனுவை சோனியா காந்தி, மல்லி கார்ஜூன கார்கே உள்ளிட்டோர் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
காலியாக இருக்கும் குடியரசு துணை தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது.
இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மராட்டிய மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்கிடையே ‘இந்தியா கூட்டணி’ வேட்பாளராக உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த அவர் அங்குள்ள மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
தாக்கல்
இதனைத்தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் சென்று, தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவரும் சி.பி.ராதாகிருஷ்ணனை போல வேட்பு மனுக்களை 4 தொகுப்புகளாக வழங்கினார். அவற்றை பெற்றுக்கொண்ட பி.சி.மோடி சரிபார்த்து ஒப்புதல் கையொப்பம் பெற்றார்.
கூட்டணி தலைவர்கள்
இந்த வேட்புமனு தாக்கலின் போது கூட்டணி கட்சிகளின் தலை வர்களான சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), ராம்கோபால் யாதவ் (சமாஜ் வாடி), திருச்சி சிவா (தி.மு.க.), சஞ்சய் ராவத் (உத்தவ் சிவ சேனா), சதாப்தி ராய் திரிணாமுல் காங்கிரஸ்) மற்றும் ப.சிதம்பரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு பிறகு சுதர்சன் ரெட்டி செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்தாந்தத்துக்கான போர்
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்பதால், எல்லோரும் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். இது சித்தாந்தத்துக்கான போர்.
இந்த தேர்தல் ஒரு நபருக்கானது மட்டுமல்ல, நாடாளுமன்றம் நேர்மையுடன் செயல்படும், அங்கு கருத்து வேறுபாடுகள் மதிக்கப்படும். மேலும் அமைப்புகள் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் மக்களுக்கு சேவை செய்யும் என்ற இந்தியாவின் கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தேர்தல் ஆகும். மாநிலங்களவை தலைவராக, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயர்ந்த மரபுகளை பாதுகாக்கும் பொறுப்பு குடியரசு துணை தலைவருக்கு உண்டு. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தன்மை, பாரபட்சமற்ற கண்ணியமான பேச்சு மற்றும் மரியாதை கலந்த உறுதியான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். நமது அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, நமது மக்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த பயணத்தை தொடங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.