டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணைக்கு 92 வயது

2 Min Read

மேட்டூர், ஆக.22 டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுகின்றன. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவு பெற்று 92ஆவது ஆண்டில் நேற்று (21.8.2025) அடியெடுத்து வைத்தது.

மேட்டூர் அணை

கர்நாடகாவில் குடகு மாவட்டம் தலைக் காவிரியில் உருவாகும் காவிரியாறு 20க்கும் மேற்பட்ட துணை ஆறுகளுடன் கலந்து அகண்ட காவிரியாக உருவாகி கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் 748 கிலோ மீட்டர் பயணித்து பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது.

மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் காவிரியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. தண்ணீரை தேக்க வழியின்றி விவசாயிகள் வேதனையுற்றனர். வெள்ளத்தை தடுத்து நிறுத்தி அந்த நீரை தேவையான போது பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு காவிரி குறுக்கே அணை கட்ட அப்போதைய  சென்னை மாகாண ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.

அணை கட்டும் பணி

அரசு நீர்த்தேக்கத்துக்காக 1925-இல்  மேட்டூரில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது. வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.

ஏறத்தாழ 9 ஆண்டுகள் பணி நடைபெற்றது. 1934 ஜூலை 14-ஆம் தேதி அணை கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்தது. மேட்டூர் அணை கட்டுவதற்காக அப்போது செலவிடப்பட்ட தொகை ரூ.4.80 கோடி. 1934 ஆகஸ்ட் 21-ஆம் தேதி அப்போது ஆங்கிலேய ஆட்சியில் சென்னை கர்னலாக இருந்த ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையைத் திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. மேட்டூர் அணை நீளம் 5,300 அடியாகும்.

அணையின் நீர்த்தேக்கப் பகுதி 59.25 சதுர மைலாகும். அணையில் 120 அடி உயரத்துக்கு, 93.5 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். அணையின் மேல்மட்ட மற்றும் கீழ் மட்ட மதகுகள் மட்டுமின்றி, உபரி நீர் போக்கியாக 16 கண் மதகுகள் மூலம் தண்ணீரை வெளியேற்றலாம். 16 கண் மதகுக்கு மேட்டூர் அணையின் கட்டுமான கண்காணிப்புப் பொறியாளராக இருந்த கர்னல் எல்லீஸ் கால்வாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இதுவரை 20 முறை ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறையும், காலதாமதமாக 61 ஆண்டுகளும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 92ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மேட்டூர் அணை இந்த ஆண்டு 5ஆவது முறையாக நிரம்பி சாதனை படைத்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (20.8.2025) விநாடிக்கு 40,750 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (21.8.2025) மாலை 30,850 கனஅடியாக சரிந்தது

. அணையில் இருந்து காவிரியில் 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 2-ஆவது நாளாக நேற்றும் 120 அடியாக நீடித்தது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *