குற்ற வழக்குகளில் சிக்கும் பிரதமர், முதலமைச்சர்களை நீக்கும் மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு

4 Min Read

புதுடில்லி, ஆக. 22- கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கும் பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவை என எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அமித்ஷா தாக்கல்

பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் ஊழல் மற்றும் கடுமை யான குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் மசோதா 20.8.2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அரசியலமைப்பு 130-ஆவது திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பிரியங்கா எதிர்ப்பு

அந்த வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான பிரியங்கா, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

இது முற்றிலும் ஒரு கொடூரமான செயல். இது ஊழல் எதிர்ப்பு என கூறப்படுவது வெறும் கண்துடைப்பு. ஏனென்றால் குற்றவாளி என்று நிரூபிக்கக்கூட தேவை இல்லை. அதற்கு முன்னதாகவே பதவி பறிக்கப்படும். நாளை நீங்கள் ஒரு முதலமைச்சர் மீது எந்த வழக்கையும் போட்டு, கைது செய்து 30 நாட்கள் சிறையில் அடைத்துவிட்டு, அவர் குற்றவாளி என நிரூபிப்பதற்குள்ளேயே அவரது பதவியை பறித்து விடுவீர்கள். இது முற்றிலும் தவறானதும், ஜனநாயக விரோதமானதும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானதும் ஆகும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.

மம்தா எதிர்ப்பு

மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தனது எக்ஸ் தளத்தில், ‘130-ஆவது அரசியல்சாசன திருத்த மசோதாவை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு சூப்பர் எமர்ஜென்சிக்கும் மேலான ஒன்றை நோக்கிய ஒரு நடவடிக்கை ஆகும். இந்தியாவின் ஜனநாயக சகாப்தத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டு வரும் செயல் ஆகும். இந்த கொடூர செயலானது இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக்கு அடிக்கப்படும் சாவு மணி ஆகும் என சாடியிருந்தார். மேலும் இந்த மசோதாவின் நோக்கம் ஒரு மனிதர் ஒரு கட்சி ஒரு அரசு என்ற அமைப்புதான் எனக் கூறியுள்ள மம்தா  ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் அடிப்படை  கட்டமைப்பை சீரழிக்கும் இந்த மசோதாவை என்ன விலை கொடுத்தேனும் எதிர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தனது எக்ஸ் தளத்தில், ‘மோடி அரசின் 3 மசோதாக்கள் அதன் நவ-பாசிச குண நலனை அம்பலப்படுத்தி உள்ளது. நமது ஜனநாயகம் மீதான இந்த நேரடி தாக்கு தலை அனைத்து வழிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கும். இந்த கொடூர நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்’ என அழைப்பு விடுத்து உள்ளார்.

மேலும் அவர், ‘இந்த மசோதாக்கள் உயர் பதவியில் குற்றங்களைத் தடுப்பது போல் தோன்றினாலும், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மோடி அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நிலையில், அவற்றின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. வாக் காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைப்போல, இந்த மசோதாக்களும் நமது ஜன நாயகத்தை சீர்குலைக்கும் அப்பட்ட மான நடவடிக்கையைக் குறிக்கின்றன’ என்றும் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா கூறும் போது, ‘பா.ஜனதாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை எதிர்க்கும் மாநில அரசுகள் இனி நிரந்தரமாக செயலிழக்க செய்யப்படும். மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டித்திருக்கும் நிலையில், இந்த மசோதாக்கள் மூலம் இனி நிரந்தரமாக செயலிழக்க செய்யப்படும். மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டித்திருக்கும் நிலையில், இந்த மசோதாக்கள் மூலம் இனி சட்டப்பூர்வமாக அரசுகளை சீர்குலைக்கலாம்’ என ஆவேசமாக கூறினார்.

ஓவைசி கண்டனம்

இந்த மசோதாக்கள், “நாட்டை ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றுவ தற்கான சதி” என ஏஅய்எம்அய்எம் கட்சி யின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.  இந்த மசோதா தொடர் பான நாடாளுமன்றத்தில் பேசிய அசாதுதீன் ஓவைசி, இந்த மசோதாக்கள் குறித்து கடுமையான விமர்சனங் களை முன்வைத்தார். “இது அரசிய லமைப்பைச் சிதைப்பதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சி. சிறிய குற்றச்சாட்டுகள் அல்லது சந்தேகங்களின் அடிப் படையில், நிர்வாக அமைப்புகள் நீதிபதியாகவும், மரணதண்டனை நிறைவேற்றுபவராகவும் மாற இது சுதந்திரம் அளிக்கும்,” என்று அவர் கூறினார். மேலும், இந்த மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டால், அது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடுக்கப் பட்ட “இறுதித் தாக்குதலாக” இருக்கும் என்றும், இது மக்களின் குரலை நசுக்கும் முயற்சி என்றும் ஓவைசி எச்சரித்தார்.

செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவியிலிருந்து அகற்றுவது என ஒன்றிய அரசு, 130-ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது.  இதுவரை பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு சட்டத்திருத்தங்கள் அனைத்தும் அவர்களுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் அமைந்திருக் கிறது. அரசியல் எதிரிகளை பழிவாங் குவதற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் பா.ஜ.க. அரசு, இதனை பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது.  எனவே, அவசரகதியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக கைவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *