மக்கள் மத்தியில் பிரச்சாரம், புயலென, சுனாமியென நடைபெறவேண்டும்!
இது ஒரு கருப்புச் சட்டம் மட்டுமல்ல; அந்தச்
சட்டத்தை முன்மொழிந்த நாளும் கருப்பு நாள்தான்!
மக்கள் மத்தியில் பிரச்சாரம், புயலென, சுனாமியென நடைபெறவேண்டும்!
சென்னை, ஆக.22 – வாக்குத் திருட்டு ஒரு பக்கம் – சட்டத் திருத்தம் இன்னொரு பக்கம் என்ற விசித்திர நிலை; இப்போது ஒரு புது நோய் போன்று ஜனநாயகத்தை அரித்துக் கொண்டிருக்கின்றது. மெல்லக் கொல்லும் விஷம் இப்போது உள்ளே தள்ளப்பட்டு இருக்கிறது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! இது ஒரு கருப்புச் சட்டம் மட்டுமல்ல; அந்தச் சட்டத்தை முன்மொழிந்த நாளும் கருப்பு நாள்தான். ஒருபோதும் இதனை அனுமதிக்கக் கூடாது. மக்கள் மத்தியில் பிரச்சாரம், புயலென, சுனாமியென நடைபெறவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி!
நேற்று (21.8.2025) ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
ஜனநாயகத்தினுடைய குரல்வளையை நெரிப்பதாகும்!
130 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நேற்று (20.8.2025) நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்திருக்கின்ற மசோதா, 30 நாள்கள் சிறைச்சாலையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய பதவி பறிக்கப்படும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு மசோதா – முழுக்க முழுக்க ஜனநாயகத்தினுடைய குரல்வளையை நெரிப்பதாகும். இது திட்டமிட்ட ஒரு செயல் என்பது ஜனநாயகப் பாதுகாவலர்களுக்கும், அரசியல் சட்டத்தை அப்படியே உருக்குலையாமல் பாதுகாக்கவேண்டும் என்று கருதுகின்றவர்களுக்கும் தெளிவாகப் புரியும்.
ஆர்.எஸ்.எஸ். தலைமையில் இருக்கின்ற இன்றைய மோடி ஆட்சி, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், வாக்குகளை மாற்றுவது, வாக்காளர்களை நீக்குதல் போன்ற முறைகேடுகளால் அமைந்துவிட்ட ஆட்சியாகும். தற்போது பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருக்கிறார்கள்.
ஜனநாயக ஆட்சிக்கு அழகாகுமா?
இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேட்டால், ‘‘நாங்கள் அதற்குக் காரணம் சொல்லவேண்டியதில்லை’’ என்று தேர்தல் ஆணையம் பதில் சொல்வது, ஒரு ஜனநாயக ஆட்சிக்கு அழகாகுமா?
காதைப் பிடித்துத் திருகி, தலையில் குட்டு வைப்பதுபோன்று உச்சநீதிமன்றம், நீக்கப்பட்ட வாக்காளர்ப் பட்டியலை உடனடியாகத் தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்படி, தேர்தல் ஆணையத் தலைவர், உறுப்பி னர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டிருக்கவேண்டாமா?
ஆனால், மோடி ஆட்சியில் அதுபோன்று எதுவுமே நடைபெறுவதில்லையே! அவர்களுக்குத் தங்களுடைய இலக்குதான் முக்கியமே தவிர, மரபுகளோ, சட்டமோ மற்றவையோ முக்கியமல்ல.
அந்த வகையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்த மசோதா என்பது, திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை நோக்கியே மய்யப்படுத்தியதாகும்.
சி.பி.அய்., வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்றவற்றை எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சுகின்றத் திரிசூலங்களாகப் பயன்படுத்துகின்றார்கள்.
மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோன்று…
இந்தத் துறையில் சம்பந்தமில்லாமல், மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோன்று, எப்போதோ நடந்த வழக்கில் இணைப்பது – காரணம் தெளிவாக இல்லாதது – மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வாய்தாக்கள் வாங்குவது.
இப்படியெல்லாம் செய்தாலும், மீண்டும் தங்க ளுக்குத் தோல்வி ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தவுடன், இன்னொரு கட்டத்தில் சூதாட்டம் ஆடுகின்றவர்கள் எல்லாவற்றையும் பந்தயத்தில் வைத்து எப்படி வெறியோடு ஆடுவார்களோ அது போல, அரசியலில் ஜனநாயகத்தை எப்படியாவது அழித்துவிட்டு, தங்களுடைய எதேச்சதிகாரத்தைக் கொண்டு வரவேண்டும் என்று துடிக்கிறார்கள்.
மக்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்பதால், குறுக்கு வழிகளைக் கையாளுகிறார்கள்
ஜனநாயக ஆட்சி – ஒற்றை ஆட்சியாக மாற்றப்படவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இந்த மசோதாவின்மூலம் தேவையில்லாதவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். மக்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்பது நன்றாக அவர்களுக்குப் புரிகிறது. அதற்காகத்தான் குறுக்கு வழிகளைக் கையாளுகிறார்கள்.
அரசியல் அடாவடித்தனத்தை ஆளுநர் மூலமாக அரங்கேற்றுகிறார்கள். அதுபோன்று, நியாயமாகத் தரவேண்டிய மாநில நிதிகளையும், எதிர்க்கட்சி முதலமைச்சர் ஆளுகின்ற மாநிலங்களுக்குத் தர மறுக்கிறார்கள். தமிழ்நாடே அதற்கு ஒரு தலைசிறந்த உதாரணமாகும்.
இன்னுங்கேட்டால், டபுள் என்ஜின் என்று சொன்ன ஆட்சியில் இல்லாதது; தமிழ்நாட்டில், சிங்கிள் என்ஜினாக இருக்கக்கூடிய ஒப்பற்ற ஆட்சியான, நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய தலைவர், மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடக்கின்றது.
உலக நாடுகள் பலவும், தமிழ்நாட்டை நோக்கி தொழில் தொடங்க வருகிறார்கள்!
பொருளாதாரத்தில், அளப்பரிய சாதனையை எட்டியிருக்கிறது. உலக நாடுகள் பலவும், தமிழ்நாட்டை நோக்கி தொழில் தொடங்க வருகிறார்கள். காரணம், இது அமைதிப் பூங்கா– ‘மதவெறி அண்டா ஒரு மண்’ என்ற உணர்வோடு, இங்கே வந்து அவர்கள் தங்களுடைய தொழில்களைத் தொடங்குகிறார்கள்.
நேற்று (20.8.2025) தொழில்துறை அமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல, 80 விழுக்காடு ஒப்பந்தங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு, அவை செயல்வடிவம் பெற்றிருக்கின்றன.
மருத்துவத் துறையில், தமிழ்நாடுதான் தலை சிறந்ததாக இருக்கின்றது.
அதேபோல, கல்வித் துறையில், தமிழ்நாடு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இன்னுங்கேட்டால், மற்றவர்கள் யாரும் நெருங்க முடியாத இடத்திற்கு வந்திருக்கின்றது.
இவையெல்லாம் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் கண்களை உறுத்துகின்றன; ஏதேதோ செய்து பார்த்தா லும், தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 40–க்கு 40 இடங்களிலும் வெற்றி
பெற்றது.
அவர்கள் என்னதான் செய்தாலும், தமிழ் மண்ணை அவர்களால் ஏமாற்ற முடியாது!
ஒரு பக்கத்தில் அமித்ஷா, இன்னொரு பக்கம் மோடி.
தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய கலாச்சாரத்தை யெல்லாம், இன்றைக்கு ஓடி ஓடி அவர்கள் நாடி வருகிறார்கள். இதோ ராஜேந்திர சோழன் என்று ஒரு பொம்மையைக் காட்டுகிறார்கள். சில மயக்க பிஸ்கெட்டுகளைத் தருகிறார்கள். ஆனால், அவர்கள் என்னதான் செய்தாலும், தமிழ் மண்ணை அவர்களால் ஏமாற்ற முடியாது.
அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல – நியாயத்திற்கும் விரோதமாகும்!
அதனால்தான், இன்னொரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 30 நாள்கள் ஒருவர் சிறைச்சாலை யி்ல இருந்தால், அவர்களுடைய பதவியைப் பறிக்கின்ற சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். பதவியைப் பறிப்பது என்பது எந்த வகையில் நியாயம்? இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல – நியாயத்திற்கும் விரோதமாகும்.
ஒருவர் தண்டிக்கப்பட்டாலொழிய, அவர் குற்றவாளி அல்ல!
இயற்கை நீதி என்ற ஒன்று உண்டு. பொதுவாக குற்றவியல் சட்டத்தினுடைய அடிப்படை என்ன வென்றால், முழுமையான சாட்சியங்கள், விசாரணைகள் எல்லாம் முடிந்து ஒருவர் தண்டிக்கப்பட்டாலொழிய, அவர் குற்றவாளி அல்ல.
ஒருவரை ரிமாண்ட் செய்கின்ற காலகட்டத்தில், அவரை கைது செய்து 15 நாள்கள் சிறைச்சாலையில் அடைப்பார்கள். பல நேரங்களில் 15 நாள்கள் ரிமாண்ட் முடிந்தவுடன், மீண்டும் 15 நாள்கள் ரிமாண்ட் செய்வார்கள்.வழக்கு விசாரணைக்கு வராது.
உலகில் எங்கும் கேள்விப்படாத ஓர் அரசியல் விநோதமாகும்!
இந்த நிலையில், 30 நாள்கள் அவர் சிறைச்சாலையில் இருந்துவிட்டார். ஆகவே, அவருடைய பதவி பறிபோகும் என்று சொன்னால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அமைச்சர் ஆகியோருடைய பதவி குறுக்கு வழியில் பறிக்கப்படுவது என்பது இருக்கிறதே, இது உலகி்ல எங்கும் கேள்விப்படாத ஓர் அரசியல் விநோதமாகும்.
ஒருபோதும் நிறைவேற்ற விடக்கூடாது!
ஆகவே, சட்டத் திருத்த மசோதா என்பது ஒரு கருப்பு மசோதா. இந்த மசோதாவை ஒருபோதும் நிறைவேற்ற விடக்கூடாது.
நாடாளுமன்ற மக்களவையில் இம்மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியாயமாக நடந்துகொண்டிருக்கின்றார்கள்.
இதில் இன்னொரு தந்திரத்தையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கையாண்டிருக்கின்றார்கள் என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
பா.ஜ.க.விற்குத் தனிப்பெரும்பான்மை இல்லை!
அது என்னவென்றால், பா.ஜ.க.விற்குத் தனிப்பெரும்பான்மை இல்லை. மக்கள் ஆதரவு இல்லை. அதனுடைய பிரதிபலிப்புதான், பா.ஜ.க. முதன்முறையாக, மைனாரிட்டி அரசாகப் பொறுப்பேற்று இருக்கின்றது. அதனை சரிக்கட்டுவதற்காகத்தான், இரண்டு பேர் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு பக்கம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு; இன்னொரு பக்கம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
ஒன்றிய முக்காலி ஆட்சிக்கு, இவர்கள்தான் நான்கா வது காலாக முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மிகவும் சாமர்த்தியமாக, ஜனநாயகப் பார்வைதான் எங்களுடைய பார்வை என்று ஒரு புறத்தோற்றத்தை உருவாக்குவதற்கு அந்த மசோதாதவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.
ஏற்கெனவே வக்ஃபு வாரியச் சட்ட மசோதாவை அனுப்பினார்கள்; அது என்னாயிற்று? அதே நிலைதான் இந்த மசோதாவிற்கும்.
அதேநேரத்தில், இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வருவது யார் என்று சொன்னால், தேசிய ஜனநாயக முன்னணி கொண்டு வருகிறது என்று சொன்னார்கள்.
காரணம் என்னவென்றால், மசோதாவைக் கொண்டு வருவது தேசிய ஜனநாயக முன்னணி என்றால்தான், பெரும்பான்மைக் கிடைக்கும். இல்லையென்றால், அது மைனாரிட்டி ஆதரவுக்கு உட்பட்டுவிடும்.
யாருக்கோ வந்தது என்று நினைக்கக் கூடாது!
ஆந்திரா, பீகார் முதலமைச்சர்களுக்கு இப்போது தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால், இது யாருக்கோ வந்தது என்று நினைக்கக் கூடாது.
தெருக்கோடியில் உள்ள ஒரு வீட்டிற்குத் தீப்பிடிக்கும்போது, அதே தெருவில், தொடக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர், அங்கேதானே தீப்பிடித்தி ருக்கிறது; நம் வீட்டிற்கு ஆபத்து இல்லை என்று நினைத்தால், அவர் எவ்வளவு புத்திசாலி என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்தத் தீ பரவுவதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதை யோசிக்கவேண்டாமா?
அதேபோன்று, யார் இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்கிறார்களோ, அவர்களுக்கே கழுத்தில் கத்தியாக நாளைக்கு மாறும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு இதனை அணுகவேண்டும்.
எனவேதான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எல்லா அம்சங்களையும் மிகச் சிறப்பாகச் சொல்லி, இந்த சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற விடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
கருப்புச் சட்டம் மட்டுமல்ல; அந்தச் சட்டத்தை முன்மொழிந்த நாளும் கருப்பு நாள்தான்!
மக்கள் மத்தியில் பிரச்சாரம், புயலென, சுனாமியென நடைபெறவேண்டும்.
இது ஒரு கருப்புச் சட்டம் மட்டுமல்ல; அந்தச் சட்டத்தை முன்மொழிந்த நாளும் கருப்பு நாள்தான்.
ஒருபோதும் இதற்கு அனுமதிக்கக் கூடாது. ஜனநாய கத்தினுடைய சவப்பெட்டியை தயாரித்துவிட்டார்கள். கடைசி நேரத்தில் ஆணி எத்தனை அடிப்பது என்பதுதான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது.
இது கிரிமினல் சட்டத்திற்கும் முரணானது.
குற்றவாளி வேறு; குற்றம் சுமத்தப்படுபவர் வேறு!
ஒருவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அதில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலும், Benefit of doubt goes to the Accused என்றுதான் தீர்ப்பு எழுதுவார்கள். குற்றவாளி வேறு; குற்றம் சுமத்தப்படுபவர் வேறு. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
குற்றம் சுமத்தப்பட்ட அன்றே ஒருவர் குற்றவாளி யாகிவிட முடியாது. உடனே, அவர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிவிட முடியாது.
ஆகவேதான், இவை அத்தனையும் புரிந்தும், புரியாதவர்கள் போன்று அவர்கள் நடந்துகொள்கிறார்கள். மக்களையெல்லாம் ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சி ஒரு பாதுகாப்பு அரண்!
ஆனால், மக்கள் மன்றம் இன்றைக்கு விழித்துக் கொண்டிருக்கின்றது. அதற்குத் தமிழ்நாடு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒரு பாதுகாப்பு அரண்போன்று இருக்கிறது.
நிச்சயமாக இந்த சட்டத் திருத்த மசோதாவை விரட்டு வோம். அதுதான் நம் எல்லோருடைய கடமையாகும்.
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!
வாக்குத் திருட்டு ஒரு பக்கம் – அதேநேரத்தில் சட்டத் திருத்தம் இன்னொரு பக்கம் என்ற விசித்திர நிலை – இப்போது ஒரு புது நோய் போன்று ஜனநாயகத்தை அரித்துக் கொண்டிருக்கின்றது.
மெல்லக் கொல்லும் விஷம் இப்போது உள்ளே தள்ளப்பட்டு இருக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
– இவ்வாறு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.