மெட்டா நிறுவனம், எண்ணங்களை உணர்ந்து செயல்படும் ஒரு புதிய வகை கருவியை பரிசோதித்து வருகிறது. கடிகாரம் போல மணிக்கட்டில் கட்டக்கூடிய இந்த அணி கருவி, ‘சர்பேஸ் எலெக்ட்ரோமயோகிராபி’ (SEMG) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இது, தசைகளின் மிகச்சிறிய அசைவுகளிலிருந்து வெளிப்படும் நுண்மின் சமிக்ஞைகளை உணரும் திறன் கொண்டது. இதனால், ஒரு விரலை அசைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும்போதே, இந்த அணி கருவி, உங்கள் எண்ணத்தைப் புரிந்துகொண்டு செயல்படும்.
இந்தத் தொழில்நுட்பம், சுட்டியை நகர்த்துதல், விசைப்பலகையை அழுத்துதல் போன்ற கணினி வேலைகளை எளிதாக்குகிறது.
இது, கணினிக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, ஒரு புதுவகை இணைப்பை உருவாக்குகிறது. இதன் வாயிலாக, கணினியை இயக்கும்போது ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்துவது போலத் தோன்றாது. மாறாக, கணினி, நமது எண்ணங்களின் நீட்சியாகவே உணர்வோம்.
இந்தக் கண்டுபிடிப்புக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
குறிப்பாக, உடல் இயக்கத்தில் சிரமம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் ஆற்றலைக் கொண்டது என்று சொல்லலாம்.