‘‘அகஸ்தியர் ஒரு மீள்பார்வை” ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை” இரண்டு நூல்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்!

சென்னை ஆக.21, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்று வரும் அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சியில் அரிய புத்தகங்களை பார்வையிட்டு, கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இரண்டு நூல்களை வெளியிட்டார்.

தரமணியில் உள்ள சிபிடி வளாகத்தில் 3 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நான்காம் மாடியில் உள்ள, “அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி அரங்கில் 19.08.2025 அன்று மாலை 5:30 மணியளவில், ஓய்வு பெற்ற ஆட்சி பணியாளர் மற்றும் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய, “அகஸ்தியர் ஒரு மீள்பார்வை” மற்றும் தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியரும் ஆய்வாளருமான அமுதா பாண்டியன் எழுதிய, “கருநாடக இசை என்னும் தமிழர் இசை” ஆகிய புத்தகங்களை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கழகத் தலைவர் ஆசிரியர் மாலை 5:30 மணிக்கு வருகை தந்தார். ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் அமுதா பாண்டியன், நூலகத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கழகத் தலைவரை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.

300 ஆண்டுகள் பழமையான அச்சுக் கருவிகள், அரிய இதழ்கள் ஆகியவை காட்சிப்படுத்தி உள்ள அரங்கத்திற்கு கழகத் தலைவரை அழைத்துச் சென்று, தொடக்ககால குடிஅரசு, விடுதலை, மணிக்கொடி உள்ளிட்ட ஏராளமான இதழ்களை கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பராமரித்து வருவதை சுட்டிக்காட்டினர். ஆசிரியர் ஒவ்வொரு இதழைப் பார்வையிடும் போதும் அது குறித்த அரிய தகவல்களை உடன் வந்தவர்களுடன் பரிமாறிக்கொண்டே வந்தார்.

கட்டவண்டி சுவாமிநாதன் என்பவர் மகாராட்டிராவில் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அரிய கட்டுரையைப் பற்றி சில தகவல்கள், வ.ரா. வைப்பற்றி அக்ரகாரத்து அதிசய மனிதர் என்னும் தலைப்பில் அறிஞர் அண்ணா எழுதியது, தமிழ்நாட்டில் பெரியார் என்னும் தலைப்பில் வ.ரா. எழுதியது உள்ளிட்ட கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதே அரங்கத்தின் முன்பு, தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் திருவள்ளுவர் என்னும் கருத்தில்  சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியத்தின் பின்னணியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய, ”அகஸ்தியர் ஒரு மீள் பார்வை”, பேராசிரியர் அமுதா பாண்டியன் எழுதிய, “கருநாடக இசை என்னும் தமிழர் இசை” ஆகிய புத்தகங்களை கழகத் தலைவர் வெளியிட்டார். நூலக பொறுப்பாளர் புத்தகங்களை பெற்றுக்கொண்டார். கழகத் தலைவர் நூலாசிரியர்களுக்கும், நூலகப் பொறுப்பாளருக்கும் ஆடை அணிவித்து மரியாதை செய்தார்.

ஆர்.பாலகிருஷ்ணன் தான் எழுதிய The Tall Man – Biju Patnaik எனும் புத்தகத்தையும், அமுதா பாண்டியன் தான் எழுதிய ”கருணாமிர்த சாகரம்” எனும் புத்தகத்தையும் கழகத் தலைவர் ஆசிரியருக்கு வழங்கி மகிழ்ந்தனர். சிறிது நேரம் நூலாசிரியர்கள் மற்றும் நூலகப் பொறுப்பாளர்களிடம் உரையாடிவிட்டு கழகத் தலைவர் புறப்பட்டார். வரவேற்றது போலவே வாசல் வரை சென்று ஆசிரியரை வழியனுப்பி வைத்தனர். எளிமையான முறையில் தமிழர் பண்பாட்டின் இரண்டு வலிமையான புத்தகங்கள் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சிவக்குமார், உடுமலை வடிவேல், சுரேசு மற்றும் ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *