புதுடில்லி, ஆக. 21 சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆளுநர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பத்தின்படி மசோதாக்கள் மீது முடிவெடுப்பதால் அதிக அளவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன” என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
விசாரணையின் முக்கிய அம்சங்கள்:
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு மசோதாவை இரண்டாவது முறையாக சட்டமன்றம் நிறைவேற்றி மீண்டும் அனுப்பினால், அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
lமசோதாக்கள் நிலுவை: தமிழ்நாடு அரசு அனுப்பிய 12 மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த காலதாமதம் ஒரு முக்கியமான பிரச்சினை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
l மக்களாட்சிக்கு எதிரான நிலை: ஒரு மசோதா நிறுத்தி வைக்கப் பட்டால் அது காலாவதியாகி விடும் என்ற கருத்தை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்படி நடந்தால், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்பவே செயல்படும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
முந்தைய விசாரணையின்போது, அரசியல் காரணங்களுக்காக குடியரசுத் தலைவர் மூலம் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கலாம், ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற முடியாது என தெரிவித்திருந்தனர்.