ஸ்பேஸ் அல்லது விண்வெளி என்றால் வெற்றிடம் என்றுதான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விண்வெளி உண்மையில் வெற்றிடம் கிடையாது என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது பூமி இருக்கும் சூரியக் குடும்பத்திலிருந்து தொலைதூர நட்சத்திரங்கள் வரை ஒரு விந்தையான சுரங்கப்பாதை பரவியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் காலங்காலமாக நம்பி வந்த நிலையில், தற்போது இதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது.
இந்த சுரங்கப்பாதை சூடான, குறைந்த அடர்த்தி கொண்ட பிளாஸ்மாவால் ஆனது. இ-ரோசிட்டா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, நம் பால்வெளியின் மறைந்திருக்கும் கட்டமைப்புகள் பற்றிய புதிய தகவல்களை அளிக்கிறது. அத்துடன், விண்வெளி வெறுமையானது என்ற நீண்டகாலக் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.
பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகளிடையே ஒரு பொதுவான கருத்து நிலவி வந்தது. அதாவது, சூரியன் “உள்ளூர் சூடான குமிழி” எனப்படும் ஒரு விந்தையான பகுதிக்குள் அமைந்துள்ளது என்பதுதான் அது. இந்தக் குமிழி சுமார் 300 ஒளி ஆண்டுகள் அகலமானது. ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஓர் ஆண்டு முழுவதும் இது எவ்வளவு தொலைவில் பயணிக்கிறதோ அதைத்தான் ஒளி ஆண்டு என்கிறார்கள்.
இந்த சூடான குமிழி, சூப்பர்நோவா வெடிப்புகளால் இது உருவானது. சுற்றியுள்ள வாயுவை சூடாக்கி, சூடான, மெல்லிய பிளாஸ்மாவின் ஒரு குமிழியை உருவாக்கின. இதுவரை, இது தனிமைப்படுத்தப்பட்ட ஓர் அம்சமாகவே கருதப்பட்டது.
மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் எல். எல். சாலா மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாம் முன்னாடி நம்பிக்கொண்டிருந்ததை விட இந்தக் குமிழி அதிகத் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆய்வில் சென்டாரஸ் விண்மீன் குழுவை நோக்கி நீட்டிக்கப்படும் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பையும், மேலும் கேனிஸ் மேஜர் திசை நோக்கி செல்லும் மற்றொரு பாதையையும் வெளிப்படுத்தியுள்ளன.
இப்போது நாம் இந்த குழியின் மய்யத்திற்கு அருகில் இருக்கிறோம், இது திட்டமிட்டது அல்ல, தற்செயலானது. மனித இனம் உருவாவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது உருவாகிவிட்டது. குறிப்பாகச் சொல்வதெனில் நாம் வான வேடிக்கைகளை தவற விட்டுவிட்டோம். அது மட்டுமல்லாது, ஒரு பெரிய அண்ட நிகழ்வின் விளைவுக்குள் நாம் தற்செயலாக நுழைந்தது போல உள்ளது. எதிர்காலத்தில் இது பற்றிய ஆய்வு அதிகரிக்கும் அப்போது நாம் இன்னும் அதிகமான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.