கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் 8.8 விழுக்காடு சாலை விபத்துகள் குறைவு

2 Min Read

சென்னை, ஆக.21- தமிழ்நாடு முழுவதும் கடந்த 7 மாதத்தில் மதுபோதையில்வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

சாலை விபத்துகள்

தமிழ்நாடு சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் தரவுகளுடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

போக்குவரத்து குறியீடுகளை திட்டமிட்ட இடங்களில் அமைத்தது, மேம்படுத்தப்பட்ட ‘யூ-டர்ன்’ வசதிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சாலை பொறியியல் மேம்பாடுகள், தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து, சாலை பாதுகாப்பு விதிகள் தொடர்பாக பொது மக்களிடையே தொடர் விழிப் புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டது ஆகிய காரணங்களால், சாலை விபத்து வழக்குகள், விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு (ஜனவரி-ஜூலை) சாலை விபத்து வழக்குகள் 10 ஆயிரத்து 792 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 268 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் சாலை விபத்து வழக்குகள் 9 ஆயிரத்து 844 ஆகவும் (8.78 சதவீதம்), உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 241 ஆகவும் (9.11 சதவீதம்) குறைந்துள்ளது.

விழிப்புணர்வு முகாம்கள்

போக்குவரத்து சட்டங்களும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் 14 ஆயிரத்து 354 நபர்கள் விபத்துகளில் இருந்து மீட்கப்பட்டனர். அதில் 6 ஆயிரத்து 84 பேர் உயிர் காக்கும் நேரமான கோல்டன் ஹவரில் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டிய…

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக (ஜனவரி முதல் ஜூலை வரை) போக்குவரத்து காவல் துறையினர் பதிவு செய்துள்ள வழக்கு விவரம் வருமாறு:-

அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 1,44,702 வழக்குகளும், சிக்னலை மதிக்காமல் சென்றது தொடர்பாக 1,50,970 வழக்குகளும், அலைபேசி பேசியபடிவாகனத்தை ஓட்டி சென்றதற்காக 2 லட்சத்து 40 ஆயிரத்து 285 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன

மதுபோதையில் வாகனங்களை ஓட்டியது தொடர்பாக 1லட்சத்து 41 ஆயிரத்து 883 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்றது தொடர்பாக 78 ஆயிரத்து 876 வழக்குகளும், வாகனங்களில் அதிக சரக்குகளை ஏற்றி சென்று தொடர்பாக 4 ஆயிரத்து 550 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 36 லட்சத்து 39 ஆயிரத்து 7 வழக்குகளும், கார் போன்ற வாகனங்களில் இருக்கைப்பட்டை அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 3 லட்சத்து 20 ஆயிரத்து 208 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *