சென்னை, ஆக.20- கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களை நேரில் பார்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை வழங்க அனைத்து ஆய்வாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சகோதரி கொலை
கோவையில் சொந்த சகோதரியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து எடுத்து சென்று விமான நிலையம் அருகே வைத்து எரித்து சாம்பலாக்கிய சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பணி ஆணைக்குழு மூலம் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம். எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபுடுகுமார் ஆஜராகி வாதிட்டார்.
5 வயது மகள்
அப்போது இந்த கொலை சம்பவம், கொலை செய்யப்பட்ட பெண்ணின் 5 வயது மகள் முன்பு நடந்துள்ளது. தாயை துண்டு துண்டாக வெட்டியதையும், எரித்து சாம்பலாக்கியதையும் பார்த்த அந்த குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை வழங்குவது போல, கொடூர கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கண்கண்ட சாட்சிகளாக இருக்கும் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை வழங்குவது இல்லை என்று கூறினார்.
சுற்றறிக்கை
இதையடுத்து, “கொலை உள்ளிட்ட கொடூர குற்றச் செயல்களை நேரில் பார்க்கும் குழந்தைகளை, சாட்சி விசாரணையின்போது எவ்வாறு நடத்தப்படுகின்றனர்? என்பது குறித்து விளக்கம் அளிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, குழந்தைகள் சாட்சியை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து ஆய்வாளர்களுக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். என்று கூறினார். பின்னர், அது தொடர்பான ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
உளவியல் சிகிச்சை
குற்றவாளிகள் இருக்கும் இடத்தில் இருந்து குழந்தைகளை அப்புறப்படுத்துவது. ‘பல்டி’ சாட்சி களாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயங்கரமான குற்ற வழக்கில் சாட்சியாக இருக்கும் குழந்தைக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில், அந்த குழந்தைக்கு பிடித்த உறவினர்கள், நண்பர்கள், தன்னார்வ தொண்டு செய்யும் நபர்களுடன் தங்க வைக்க வேண்டும்.
அந்த குழந்தையிடம் அன்பாக பேசி விசாரிக்க வேண்டும். திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்கக்கூடாது. அதை முடிந்தால் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அப்போது அந்த குழந்தையின் பாதுகாவலரும் உடன் இருக்க வேண்டும். குற்றச் சம்பவத்தை பார்த்ததால் மனதளவில் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக உளவியல் நிபுணர்கள் மூலம் சிகிச்சை வழங்க வேண்டும்.
கண்காணிப்பு குழு
அந்த குழந்தைக்கு ஏதாவது மிரட்டல் இருந்தால், தகுந்த பாதுகாப்பை உடனடியாக வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
“இதையடுத்து நீதிபதிகள், குழந்தைகள் சாட்சிகளாக எத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன? இந்த வழக்குகளில் குழந்தைகளை சாட்சி சொல்ல வைப்பதற்கு காவல்துறை தலைவர் அல்லது கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.