புதுடில்லி ஆக 20 ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச் சரவை நேற்று (19.8.2025) ஒப்புதல் அளித்தது.
ஆன்லைன் சூத்தாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்புப் பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு அபராதம் விதிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ மாநில அரசு சட்டங்களில் இடம் இல்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (19.8.2025) நடைபெற்றது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச் சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஏழாண்டு சிறைத் தண்டனை
இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும். இவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும். ஆன்லைன் சூதாட்டத்துக்கு இந்த மசோதா முடிவு கட்டும் எனத் தெரிகிறது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. புதிய மசோதாவின்படி ஆன்லைன் சூதாட்டத்துக்கும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.