என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகம் விதைக்கும் நச்சு விதை!

இந்தியப் பிரிவினைக்கு முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா, காங்கிரஸ் மற்றும் அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் ஆகிய மூவருமே காரணம் என்று, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் [என்.சி.இ.ஆர்.டி.] வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14-அய் ‘பிரிவினைக் கொடுமைகளின் நினைவு நாளாக’ ஒன்றிய அரசு கடைப் பிடித்து வருகிறது. இதையொட்டி, என்.சி.இ.ஆர்.டி. “பிரிவினையின் குற்றவாளிகள்” என்ற தலைப்பில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்புத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் உள்ள முக்கிய தகவல்கள்:

முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா, “ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்” என்று கூறி, பிரிவினைக்கு வழிவகுத்தார்.

பிரிவினைக்கான கோரிக்கையை முதலில் ஜின்னா முன்வைத்தார். ஆனால், அதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதே இரண்டாவது முக்கியக் காரணம்.

பிரிவினையை விரைந்து செயல்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய தவறை மவுண்ட்பேட்டன் செய்தார். அதிகார மாற்றத்திற்கான தேதியை 1948 ஜூன் மாதத்தில் இருந்து 1947 ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றினார். இதன் காரணமாக, எல்லைகள் அவசரமாகப் பிரிக்கப்பட்டன. பிரிவினைக்கு முன் செய்யப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

நாட்டின் முதல் துணைப் பிரதமரான சர்தார் வல்லபாய் படேல், “இந்தியா ஒரு போர்க்களமாக மாறியது; உள்நாட்டுப் போரைவிட, நாட்டைப் பிரிப்பது நல்லது” என்று கூறியதாகவும் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. இந்தப் பாடத்தில்,  காந்தியார் பிரிவினையை எதிர்த்த போதிலும், அவரால் அதைத் தடுக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

உண்மையான வரலாறு என்ன?

ஹிந்து மகாசபா 1915 ஆம் ஆண்டு பண்டிட் மதன் மோகன் மாளவியா வால் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் என்ன? ‘‘ஹிந்துக்களுக்கு என்று ஒரு தனி தேசம். அங்கு ஹிந்துக்களின் தர்மங்களே சட்டமாக இருக்க வேண்டும்’’ என்பதுதான்.

ஹிந்துமகாசபையின் தீவிர ஆதரவாளரான சாவர்க்கர் 1923 ஆம் ஆண்டு  “ஹிந்து ராஷ்டிரம்” (ஹிந்து தேசம்) என்ற கருத்தை முன்வைத்து, “ஹிந்துத்துவா, ஹிந்து யார்?” என்ற தனது நூலில், ஹிந்துக்களுக்கான தனி தேசம்  என்ற கருத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

சாவர்க்கரின் கொள்கைப்படி, ஹிந்துக்கள் ஒரு தனி தேசமாக (nation) இருக்க வேண்டும். ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் ஆகியோர் ஒரே பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உடையவர்கள் என்றும், அவர்கள் ஒரு தேசத்தினராகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இந்தியா ஒரு ஹிந்து தேசம், முஸ்லிம்கள் ஒரு தனி தேசம் என்ற இரு தேசக் கோட்பாட்டை சாவர்க்கர் தான் முதலில் முன்வைத்ததார்.  ஹிந்துமகாசபை மறைமுகமாகக் கூறியகருத்தை வெளிப்படையாகவே பொதுவெளியில் சாவர்க்கர் பேசினார்.  சாவர்க்கரின் இந்தக் கருத்துக்கள் இந்திய தேசிய அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. ஒருபுறம், ஒருமைப்பட்ட இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தும் தேசியவாதிகளால் அவர் விமர்சிக்கப்பட்டார்.

உண்மை வரலாறு இவ்வாறு இருக்க, என்.சி.இ.ஆர்.டி.யால் வெளியிடப்பட்ட பாடப் புத்தகத்தில் உண்மைக்கு மாறான – அப்பட்டமான பொய்ச் சரடுகளைத் திணித்துள்ளது.

மாணவர்கள் மத்தியில் இத்தகைய நச்சு விதைகளை விதைத்தால் எதிர்காலம் மிகப் பெரிய வெறுப்பு அரசியலைத்தானே உருவாக்கும்!

காந்தியாரைவிட சாவர்க்கர் பெரிய தலைவர் போல காந்தியார் படத்தை சிறியதாகவும், சாவர்க்கர் படத்தைப் பெரிய அளவிலும் வெளியிடுவது எதைக் காட்டுகிறது? வரலாறு தெரிந்தவர்கள் வெட்கித் தலை குனிய மாட்டார்களா?

தேசியக் கல்விக் கொள்கை என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, என்.சி.இ.ஆர்.டி. தயாரிக்கும் நூல்களில் வெளியிடப்பட்டுள்ள பாடப் புத்தகத்தை நோக்கும்போது தேசியக் கல்வித் திட்டத்தின் பாடப் புத்தகங்களும்இந்த லட்சணத்தில் தான் இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பிஜேபி இருக்கும் ஒவ்வொரு நொடியும்; மக்களின் தலையில் அபாய இடியை இறுக்கும் என்பதை உணர வேண்டும். மக்கள் மத்தியில் பிஜேபியின் பாசிசத்தை பெரிய அளவு விளக்கி உணரும்படிச் செய்வதுதான் ஒரே வழி!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *