புதுடில்லி, ஆக.19 இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மேனாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டியை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே.
நாட்டின் நலனுக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை என்ற கருத்தை வைத்து மாநிலங்களிடமே கல்வி முழுமையாக கொடுத்துவிடவேண்டும் என்று கூறிய சுதர்சன் ரெட்டி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டார்.
குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் திடீரென்று பதவி விலகியதை அடுத்து காலியான அந்த இடத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் பாஜக சார்பில் அக்கட்சியில் மேனாள் தமிழ்நாடு பாஜக தலைவரும், தீவிர ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும், தற்போது மகாராட்டிரா மாநில ஆளுநரு மான சி.பி.ராதாகிருஷ்ணனை இறக்கி உள்ளது.
இந்தியா கூட்டணி சார்பில்…
இந்த முறை இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (19.8.2025) டில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி அமர்வில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நீதிபதி
பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடப் போவதாக முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.
ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றிய சுதர்ஷன் ரெட்டி, 1988 முதல் 1990 வரை ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி யுள்ளார்.
ஆந்திர மற்றும் அசாம் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், ஜனவரி 12, 2007 அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஜூலை 8, 2011 அன்று ஓய்வு பெற்றார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்து
ஓய்வு பெற்ற பிறகு, நீதிபதி சுதர்சன் ரெட்டி புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், இந்தியாவின் தற்போதைய கல்வி முறை பாதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். அவர் ‘‘கல்வி உரிமை மாநாடு’’ ஒன்றில் இது குறித்து பேசியிருக்கிறார். மேலும் கல்வி என்பது முழுமையாக மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என்று இவர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.