புதுடில்லி, ஆக.19- ராணுவப் பயிற்சியின் போது காயமடைந்து, பயிற்சி மய்யத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் சிர மங்கள் குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
500 பேர் விடுவிப்பு
நாட்டின் முன்னணி ஜி.எஸ்.டி., சி.எஃப்.எஸ்.எஃப். ராணுவப் பயிற்சி மய்யங்களான தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் ஒரு காலத்தில் பயிற்சி பெற்று, பயிற்சியின் போது காயமடைந்த மேனாள் மாணவர்களின் நிலை குறித்து அண்மையில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மேற்கண்ட 2 அகாடமிகளில், கடந்த 1985 ஆம் ஆண்டில் இருந்து பயிற்சியின் போது காயமடைந்து உறுப்புகள் பாதிப்பு காரணமாக அகாடமிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரிகள் நிலை மாணவர்கள் சுமார் 500 பேர் இருக்கிறார்கள்.
ரூ.40 ஆயிரம் கருணைத் தொகை
அவர்களுக்குக் கருணைத் தொகையாக மாதத்துக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தொகை அவர்களின் மருத்துவச் செலவுக்கு போதுமானதாக இல்லை. இவர்கள் ராணுவத்தில் அதிகாரிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு முன்பே விடுவிக்கப்பட்டதால், மேனாள் ராணுவத்தினர் என்ற தகுதியும் பெற மாட்டார்கள், அப்படி பெற்றிருந்தால், அவர்கள் மேனாள் ராணு வத்தினர் சுகாதாரத் திட்டத்தின்கீழ், ராணுவ மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று இருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
ராணுவத்தில் பணி
இந்தப் பத்திரிகைச் செய்தியை உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து கடந்த 12 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இவ்வழக்கு நேற்று (18.8.2025) நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா பட்டியிடம் நீதிபதிகள் கூறியதாவது:-
பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ள துணிச்சலான பயிற்சி மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெற்று வந்தவர்கள். அவர்கள் அடைந்த காயமோ, உறுப்புக் குறைபாடோ அவர்கள் ராணு வத்தில் இருப்பதற்குத் தடைக்கற்களாக இருக்கக்கூடாது. அவர்கள் ராணுவத்தில் இருப்பதை விரும்புகிறோம். இவர்களைப் போன்ற வர்கள் மருத்துவ சிகிச்சை முடிந்தவுடன், ராணுவம் தொடர்பான உட்கார்ந்து செய்யும் வேலையிலோ அல்லது இதர வேலைகளிலோ அமர்த்தப்படுவது பற்றி ஒன்றிய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
காப்பீடு
மேலும், பயிற்சியின்போது உறுப்பு குறைபாட்டை சந்திக்கும் பயிற்சி மாண வர்களின் மாதாந்திர கருணைத் தொகையான ரூ.40 ஆயிரத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும். ராணுவப் பயிற்சி யின்போது ஏற்படும் மரணம் மற்றும் உறுப்பு குறைபாடு போன்ற சிக்கல்களை எதிர் கொள்ள அவர்களுக்கு காப்பீடு அளிப்பது பற்றி ஒன்றிய அரசு ஆராய வேண்டும். ராணுவப் பயிற்சி மய்யங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட காயமடைந்த மாணவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.