தேர்தல் ஆணையத்தின்மீது கரிப்பூச்சு? தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் ‘இந்தியா’ கூட்டணி அதிரடி திட்டம்

புதுடில்லி,ஆக.19 தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சிகள் அதிரடி திட்டம் தீட்டி உள்ளன. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு காரணங்களுக்காக 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. நாடாளுமன்றத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தால் கடும் அமளி நடக்கிறது. இதற்கிடையே, பாஜவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

கருநாடகா மக்களவை தேர்தலின் போது பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் அதிகாரப் பயணத்தையும் மேற்கொண்டுள்ளார். இதனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 17.8.2025 அன்று விளக்கம் அளித்தார்.

ஏன் கேட்கவில்லை?

அதில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய அவர் ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் பேசுவதால் அவர் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆதாரம் இருந்தால் அதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் மட்டும் தேர்தல் ஆணையம் ஏன் பிரமாண பத்திரம் கேட்கவில்லை?’’ என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாகி உள்ள நிலையில், நேற்று (18.8.2025) நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, ராகுல் காந்தியின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது குறித்து விவாதிக்கப்பட்டது.

தேர்தல் செயல்பாட்டில் எழுப் பப்பட்ட சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்பதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டுமென பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நட வடிக்கை விவாத கட்டத்தில் இருந்தாலும், மீண்டும் கூடி முடிவெடுக்கலாம் என திட்டமிடப் பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *