ஊராட்சி பிரதிநிதிகள் – அலுவலர்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழ்நாடு ஒரே மாதத்தில் 83 சதவீத மின் சான்றுகளை உருவாக்கி சாதனை

சென்னை, ஆக.19- ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்ததுடன், அந்தப் பயிற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் ஜூலை மாதத்தில் மட்டும் பயிற்சியாளா்களை ஆதார் எண் வழியாக சரிபார்த்து 83 சதவீத இணையவழி (மின்னணு) சான்றுகளை ஒன்றிய அரசு உருவாக்கித் தந்துள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங் களைவிட தமிழ்நாட்டை முதலிடத் துக்குக் கொண்டு வந்துள்ளது.

அடிப்படைப் பயிற்சி

தமிழ்நாட்டில் 12,482 ஊராட்சிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தப்பட்ட பிறகு, தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளுக்கு அடிப்படைப் பயிற்சிகள் கொடுக்கப்படும். மாநில அரசின் சார்பில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சியின் பயிற்சித் துறை சார்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பதவி நிலைக்கு
ஏற்ப பயிற்சிகள்

ஒவ்வொருவரின் பதவி நிலைக்கு ஏற்ப இந்தப் பயிற்சிகள் மூன்று விதமான இடங்களில் அளிக்கப்படுகின்றன. மாவட்டத் தலைவா்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் ஆகியோருக்கு சென்னை அருகில் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா் ஆகியோருக்கு பவானிசாகா், தே.கல்லுப்பட்டி, கிருஷ்ணகிரி அணை, ச.வி. நகரம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய 5 இடங்களில் உள்ள மண்டல அளவிலான நிறுவனங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினா்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி மய்யத்திலும் பயிற்சிகள் கொடுக்கப்படும். மக்களால் தோ்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அவா்கள் அடிப்படைப் பயிற்சிப் பெறுவது கட்டாயம்.

இதைத் தொடா்ந்து, பதவிக் காலத்தின் இடையிலும் இதே போன்று புத்தாக்கப் பயிற்சி அனைவருக்கும் அளிக்கப்படும். ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமின்றி, அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் அவரவா் பதவி நிலைக்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நிதியாண்டில் இருந்தும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சிக்கான கணக்கீடுகள் தொடங்கும். அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் 16,846 பேருக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வறுமை இல்லாத மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தபட்ட ஊராட்சி, நல்வாழ்வு கொண்ட ஊராட்சி, குழந்தை நேய ஊராட்சி, குடிநீரில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, பசுமை மற்றும் சுகாதாரம் நிறைந்த ஊராட்சி, உள்கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்பு நிறைந்த ஊராட்சி, சிறந்த நிர்வாகம் கொண்ட ஊராட்சி, பெண்கள் நேய ஊராட்சி உட்பட 9 கருப்பொருள்களை உள்ளடக்கிய நீடித்த நிலையான வளா்ச்சிக்கான இலக்குகளை மய்யமாக வைத்து பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம்.

4 மாதங்களில் 16,000க்கும் அதிகமானோர்க்கு பயிற்சி

இந்த வகையில், 4 மாதங்களில் 16,000-க்கும் அதிகமான ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஜூலையில் அவா்களுக்கான சான்றிதழ்கள் அதிகமாக உருவாக்கப் பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை நாட்டிலேயே தமிழ்நாட்டை முதலிடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

சான்றிதழ்கள்
எப்படி உருவாகும்?

ஊரக உள்ளாட்சிப் பிரதி நிதிகளுக்கான பயிற்சி அளிக்கப் படுவதற்கு முன்பாக, அதுகுறித்த விவரங்கள் ஒன்றிய அரசின் ஊரக உள்ளாட்சித் துறை இணையதளத்தில் பதிவு செய்யப்படும். பயிற்சி முடிந்த பிறகு, பயிற்சியாளா்களின் ஆதார் எண் போன்ற சான்றுகளுடன் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இதையடுத்து பயிற்சியாளா்களின் விவரங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு உறுதி செய்யப்பட்ட பிறகு ஒன்றிய அரசால் இணையதளம் வழியாகவே மின் சான்றிதழ்கள் உருவாக்கப்படும்.

அப்படி உருவாக்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கையில் ஜூலை மாத நிலவரப்படி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, பயிற்சி பெற்றவா்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதில், 82.96 சதவீதம் அளவுக்கு ஒன்றிய அரசால் மின் சான்றிதழ்கள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

இரண்டாவது இடத்தில் 82.84 சதவீதத்தைப் பெற்று ஜம்மு- காஷ்மீரும், மூன்றாவது இடத்தில் 81.52 சதவீத சான்றிதழ்களை உருவாக்கி அரியானாவும் உள்ளன.

கேரளம் 77.01 சதவீத சான்றிதழ் களுடன் நான்காவது இடத்தையும், 76.86 சதவீத சான்றுகளை உருவாக்கி மேற்கு வங்கம் அய்ந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இதன்மூலம், அதிகமான சரியான நபா்களுக்கு ஊரக உள்ளாட்சி தொடா்பான பயிற்சிகளை அளித்து நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்று இருக்கிறது என அந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *