பீஜிங், ஆக.18- சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான சீனா, ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் முன்ன ணியில் உள்ளது. அங்கு அண்மையில் ரோபோக்கள் விற்பனைக்கு என்றே பிரத்யேக வணிக வளாகம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவின் குவாங் சோவைச் சேர்ந்த ‘கைவா டெக்னாலஜி’ நிறுவனம் கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் திறன் உடைய ரோபோவை உருவாக்கும் ஆய்வுப் பணி யில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிபெங் தலைமை தாங்குகிறார்.
இந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றால், குழந்தை பெற வாயப்பற்ற இணையர்கள் அல்லது உயிரியல் கர்ப்பத்தை விரு ம்பாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து விஞ்ஞானி ஜாங் கிபெங் கூறுகையில், “இந்த தொழில்நுட்ப ஆய்வு தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளது. ரோபோவின் வயிற்றில் செயற்கைக் கருப்பையை பொறுத்தி, செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்யப்படும். கரு அதில் வளரும். இந்த ரோபோவின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகும்,” என்றார்.
இந்த தொழில்நுட்பம், 2017இல் செயற்கை கருப்பை திரவத்துடன் கூடிய, ‘பயோபேக்’ மூலம் ஆடுகள் கருவிலிருந்து வளர்க்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
பிள்ளை வரம் வேண்டும் என்று அரச மரத்தைச் சுற்றி வருபவர்கள் கவனிப்பார்களா?