சென்னை, ஆக. 18- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று (17.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் தோழி விடுதி, மாத வாடகைக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பது பெரும் சிரமத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் மலிவான தங்குமிட வசதிகளை வழங்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன் இந்த விடுதிகளை திமுக அரசு தொடங்கியது.
ஜிஎஸ்டி
ஆனால் ஜிஎஸ்டி தனியாக வசூலிக்கப்படுவதால், பல விடுதிகளில் மாத வாடகை ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, அடையாறில் இருவர் தங்கும் குளிர்சாதனமில்லா அறையின் வாடகை ரூ.5,800 இருந்து ரூ.6,844 ஆக உயர்ந்துள்ளது. தாம்பரத்தில் வாடகை ரூ.9,200 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு, பணி செய்யும் பெண்களுக்கும், உயர் கல்விக்காக தயாராகும் பெண்களுக்கும் கடுமையான நிதிச் சுமையாக மாறியுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய அரசும் தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க கோருகிறேன். இந்த விடுதிகள் ஆடம்பரத் தங்குமிடங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்களின் ஓர் அங்கம் என்பதால், அவை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படக்கூடாது. பெண்களைச் சுயசார்புடையவர்களாக உருவாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களது நிதிச் சுமையை ஜிஎஸ்டி வரியை சுமத்தி கூட்டாமல், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.