புதுடில்லி, ஆக.17- ஒன்றிய அரசின் ‘ஜி.எஸ்.டி. 2.0’ வரி சீர்திருத்தங்கள், வளர்ச்சியை முடக்கும் வகையில் இல்லாமல், எளிமையாகவும், மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தீபாவளிக்கு சிறு, குறு தொழில்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று அறிவித்தார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12% மற்றும் 28% அடுக்குகளை நீக்கி, 12% அடுக்கில் உள்ள பெரும்பாலான பொருட்களை 5% அடுக்குக்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்களை 18% அடுக்குக்கும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ள ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக இருந்தன என்றும், வரி ஏய்ப்புக்கு வழிவகுத்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பழைய ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொருளாதார வளர்ச்சி இருக்காது என்பதை பிரதமர் மோடி இப்போது உணர்ந்துள்ளார். வரி விகித கட்டமைப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஜி.எஸ்.டி. 2.0, வளர்ச்சியை முடக்கும் வரியாக இல்லாமல், நல்ல முறையிலும், எளிமையான வகையிலும் இருக்க வேண்டும். அதே சமயம், மாநிலங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.