மன்னார்குடி , ஆக.17 மன்னார்குடி அடுத்த வடுவூரில் கடந்த 15.8.2025 அன்று தொடங்கிய தமிழ்நாடு அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மூன்று நாள்கள் நடைபெறும் கையுந்து பந்து போட்டியினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கையுந்து பந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளி டையே உரை யாற்றினார்.
இன்று தமிழ்நாட்டில் ‘அனை வருக்கும் அனைத்தும்’ என்று கூறக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் நீங்கள் படித்த பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ்நாட்டை பார்த்திருப்பீர்கள். இன்று இருக்கும் தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் உங்களுக்கு மிகத் தெளிவாக புரியும். முன்பு ‘‘படி, படி’’ என்று சொன்னார்கள். அதைத்தான் நாங்களும் சொன்னோம். ஆனால், பெண் கல்விக்குத் தந்தை பெரியார் முக்கியத்துவம் கொடுத்தார்.
தந்தை பெரியார் யார் என்று உங்க ளுக்கு தெரியுமா? இவ்வளவு பெண்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கைப்பந்து விளையாட்டில் தங்களுடைய தனித்திற மையை வெளிப்படுத்த இங்கு திரண்டு வந்திருக்கிறீர்கள். அதுவும், நீங்கள் டி-ஷர்ட், பேண்ட் அணிந்து கொண்டு கம்பீரமாக நீங்கள் நினைத்ததைச் செய்து சாதனைப் படைக்க விளை யாட்டு களத்தை நோக்கிச் செல்ல காத்திருக்கிறீர்கள். இது யாரால் வந்தது என்று நினைத்தீர்கள்? இதற்கு ஒரே காரணம் முழு முதல் காரணம் தந்தை பெரியார் மட்டும்தான். அதனால் நீங்கள் தந்தை பெரியார் என்ற பெயரை மறக்கக்கூடாது. குறிப்பாக பெண்கள் மறக்கவே மறக்கக்கூடாது. தயவு செய்து நீங்கள் தந்தை பெரியாரை முழுமையாக படிக்க வேண்டும்.
உங்கள் பெற்றோர்களோ நீங்களோ எந்த கட்சியிலோ, இயக்கத்திலோ இருக்கலாம். அது உங்களுடைய தனிப்பட்ட உரிமை சுதந்திரம் ஆனால், நீங்கள் எங்கு இருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்க்கையை படிக்கவேண்டும் என்றால், அது தந்தை பெரியார் வாழ்க்கை தான். அவரை எந்தக் காலத்திலும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. தந்தை பெரியார் இட்ட அந்த அடித்தளம் தான் இன்று தமிழ்நாடு எல்லா துறைகளிலும் நம்பர் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. நீங்கள் விளையாட்டுக்காகவும், கல்விக்காகவும் வட மாநிலங்களுக்குச் சென்று இருப்பீர்கள். அங்குள்ள பெண்கள் எல்லாம் சாதாரணமாக சாலையில் நடந்து செல்ல முடியாது. இன்று இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். அதற்குக் காரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சி தான். இது இன்று நேற்று நடந்ததல்ல; காலம் காலமாக தந்தை பெரியார் காலத்திலிருந்து தொடங்கியது. ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தார்கள். இன்று அவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும், பல்வேறு துறைகளிலும் உலகம் முழுவதும் சென்று சிறந்து விளங்கி வருகிறார் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் என்ற ஒரு மாபெரும் மனிதர்தான்.
தமிழ்நாட்டில் திராவிட மாட லாட்சியில் தான் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 100 விளையாட்டு வீரர்களுக்குத் தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினை அளித்துள்ளார். அதேபோல், நான் சார்ந்திருக்கும் தொழில் துறையில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய நான்கு பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளேன். கடந்த அய்ந்து ஆண்டுகளாக விளையாட்டுத் துறைக்கு பயிற்சியாளர்கள் இல்லை. ஒரே நாளில் 73 பேர் பயிற்சியாளராக நியமித்தார் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததின்படி இதுவரை 75 தொகுதிகளில் உள் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த 25 விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு வீரர்களை அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அதே போன்று, வெளிநாடுகளிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்து தமிழ்நாட்டில் உள்ள வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து அவர்களை உலக அளவில் கொண்டு செல்ல திராவிட மாடல் திமுக ஆட்சி தயாராக உள்ளது அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி பெரு முயற்சி எடுத்து வரு கிறார் என்றார்.