ஜெய்ப்பூர், ஆக.16– ஒன்றிய பாஜக அரசு மும்மொழிக் கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி மொழியைத் திணிப்பதாக பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மறுபக்கம் பாஜக அரசு சமஸ்கிருத மொழிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதாகவும் புகார் எழுந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பயன்பாட்டி லேயே இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு ரூ.113 கோடி மட்டுமே ஒதுக்கியது பெரும் சர்ச்சை யாக வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சமஸ்கிருத மொழிக்கு தொடர்ந்து முக்கி யத்துவம் கொடுப்பதாக புகார் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரிக்கேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழி கட்டாயம் என்கிற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சமஸ்கிருத கல்வித்துறை ஆணையர் பிரியங்கா ஜோத்வட் கூறுகையில், சமஸ்கிருதம் கட்டாயமாக்குவது தொடர்பான பரிந்துரையை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஒன்றிய அரசுக்கு அனுப்பினோம். இதற்கான பாடத்திட்டம், புத்தகம் ஆகியவை தயாரிக்கப்பட்டு விட்டன. அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் வழங்கிவிட்டால், பாடத்தைத் தொடங்கி விடுவோம். என்றார்.
ராஜஸ்தான் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த சமஸ்கிருத புத்தகங்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்சிஇஆர்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.