ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக இலட்சணம்! எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய 429 மருத்துவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

2 Min Read

புதுடில்லி, ஆக.16 நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மருத்துவமனைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 429 மருத்துவர்கள் பதவி விலகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதிக ஊதியம், பணிச்சூழல், நெருக்கடி மற்றும் பதவி உயர்வு தாமதம் போன்ற காரணங்களால் உயர்பதவி வகித்த மருத்துவர்கள் உட்படப் பலர் வெளியேறி, தனியார் மருத்துவமனைகளில் பணிக்குச் சேர்ந்துள்ளனர்.

2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவ மனைகளிலிருந்து  வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டது.

டில்லி எய்ம்ஸ் – 52 மருத்துவர்கள்,  ரிஷிகேஷ் எய்ம்ஸ் – 38 மருத்துவர்கள்,  ராய்ப்பூர் எய்ம்ஸ் – 35 மருத்துவர்கள்,  பிலாஸ்பூர் எய்ம்ஸ் – 32 மருத்துவர்கள், மங்களகிரி எய்ம்ஸ் – 30 மருத்துவர்கள், போபால் எய்ம்ஸ் – 27 மருத்துவர்கள்

தனியார் மருத்துவமனை

இவ்வாறு பதவி விலகியவர்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள் ளனர். டில்லி எய்ம்ஸ் மருத் துவமனையின் மேனாள் இயக்குநராக இருந்த மருத்துவர் ரந்தீப் குலேரியா, இதயவியல் துறை முன்னாள் தலைவர்  ஷிவ் சவுத்ரி, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை முன்னாள் தலைவர்  ஷஷாங்க் ஷரத் காலே போன்ற உயர்பதவி வகித்த மூத்த மருத்துவர்களும் பதவியிலிருந்து விலகி, பிரபல தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.

எய்ம்ஸ் போன்ற அரசு நிறுவ னங்களில் ஒரு மூத்த மருத்துவருக்கான மாத ஊதியம் சுமார் ரூ.2.5 லட்சம் வரை இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் இதைவிட 4 முதல் 10 மடங்கு வரை அதிக ஊதியம் வழங்குவது ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

எனினும், பதவி விலக மருத் துவர்கள் வேறு சில முக்கியக் காரணங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர். தனியார் மருத்துவமனையில் சேர்ந்த ஒரு மருத்துவர், “பணம் மட்டுமே முக்கியம் என்றால் நான் எப்போதோ தனியார் துறைக்குச் சென்றிருப்பேன். டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்தின் திறமையற்ற பணிச்சூழல், தலைமைப் பண்பு இல்லாத நிர்வாகம், துறை ரீதியான முடிவுகளைக்கூட எடுக்க முடியாத அளவுக்கு இருந்த நெருக்கடி போன்றவை பதவி விலக முக்கியக் காரணங்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், அனுபவம் இல்லாதவர் களுக்கு முன்னுரிமை அளிப்பது, அதிகப்படியான பணிச்சுமை, பதவி உயர்வில் ஏற்படும் தாமதம் போன்றவையும் மருத்துவர்களின் பதவி விலகல் முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இந்த நிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத் துவமனைகளில் மருத்துவர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *