சென்னை, ஆக.16- சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் மற்றும் குற்றங்களுக்கு வழிவகுக்கும் ரீல்ஸ்களை தடுக்கக் கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் எழுத உள்ளது.
காவல்துறையினர் நீண்டகாலமாகவே சமூக வலைதளங்களில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் வரைமுறையின்றி இருப்பதால், அவை குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். முகநூல் நிறுவனம், ஏஅய் தொழில்நுட்பம் மூலம் வன்முறையைத் தூண்டும் பதிவுகள், ஒளிப்படங்கள் அல்லது காட்சிப் பதிவுகளை தானியங்கி முறையில் தணிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது.
குற்றங்களைத் தூண்டுகிறது
ஆனால், அதே நிறுவனமான மெட்டாவால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமில் இந்த வரைமுறை இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக, அரிவாளை வைத்து எடுக்கப்படும் நிழற்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள், சட்டவிரோத பைக் ரேசிங் காட்சிப் பதிவுகள், மற்றவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தூண்டும் உள்ளடக்கங்கள், வன்முறையை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் இந்த வகையான குற்றங்களை இன்ஸ்டாகிராமில் தூண்டும் உள்ளடக்கங்கள் பதிவேற்றப்படுவதாக காவல்துறை வேதனை தெரிவித்துள்ளது. இதனால் இதை பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், குற்றங்களைத் தூண்டும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற பெயரில் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் எழுத சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது, முகநூலில் உள்ள ஏஅய் அடிப்படையிலான தணிக்கை முறையை இன்ஸ்டாகிராமிலும் அமல்படுத்த வேண்டும் என்று காவல்துறை கோரிக்கை விடுக்க உள்ளது. இந்த நடவடிக்கை குற்றங்கள் நடப்பதை குறைக்கும் முக்கிய படியாக இருக்கும்.
இது மதச்சார்பின்மை நாடாம்!
இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசுவதா?
ஆளுநருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!
சென்னை, ஆக.16- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜீபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய பிரிவினையின் போது பல லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், இந்த வன்முறையை முஸ்லிம் லீக் தான் திட்டமிட்டு கட்டவிழ்த்ததாகவும், மேலும் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரை காபிர் என்று முத்திரை குத்தியதால் பல லட்சக்கணக்கானோர் வேரறுக்கப்பட்டதாகவும், ராஜ் பவனின் (ஆளுநர் மாளிகை) எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நடுநிலையாளராக இருக்க வேண்டியவர், தன் சொற்களால் சமுதாயத்தில் விரிசல் உண்டாக்குவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல. மேலும், இந்தியப் பிரிவினையின் போது லட்சக்கணக்கான மக்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக அவர் தெரிவிக்கும் கருத்திற்கு நம்பகமான ஆதாரம் ஏதேனும் அவரிடம் உள்ளதா? கொல்லப்பட்டவர்கள் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எங்கு, எப்போது, எப்படி என்ற உண்மையான விவரங்களை அவர் சமர்ப்பிக்க முடியுமா?
சமுதாயத்தில் அவதூறுகளை பரப்புவதன் மூலம் வெறுப்பை விதைக்க முயற்சிக்கிறார். மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை புறக்கணிக்கும் ஆளுநரின் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.