ஒபாமா
பில் கேட்ஸ்
காசை வலது கையால்தான் கொடுக்க வேண்டும். எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வலது கையால் தொட்டு தொடங்க வேண்டும். இடதுகையால் எதை செய்தாலும் விளங்காது என இடது கை பழக்கம் பற்றிய பல தவறான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது.
இடது கையால் சாப்பிடுபவர்களை கண்டால் அருவருப்பது அதில் முக்கியமானது. குழந்தைகள் இடது கையால் எழுதினால், “ஒழுங்கா அந்தக் கையை பயன்படுத்தப் போகிறாயா, இல்லையா?” என்று மிரட்டி பயமுறுத்தி வலது கையை பயன்படுத்தப் பழக்கும் தவறை பல பெற்றோர்கள் செய்கிறார்கள்.
உச்சம் தொட்டவர்கள்
நிஜத்தில் இடது கைப்பழக்கம் என்பது ஒரு குறைபாடு அல்ல. அது ஒருசிறப்புத்திறன். சொல்லப் போனால் இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் அதிக புத்திசாலித்தனமும், தாங்கள் பங்களிக்கும் துறையில் சிறப்புத்திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். உதாரணமாக சொல்வதென்றால் இந்திய பிரபலங்களான காந்தியடிகளும், சச்சின் டெண்டுல்கரும், அமிதாப்பச்சனும்கூட இடது கைப்பழக்கம் கொண்டவர்களே. அவர்கள் தங்கள் துறையில் உச்சம் தொட்டவர்கள்.
உலக அளவிலான உதாரணம் என்றால் விஞ்ஞானி அய்ன்ஸ்டின், அரசியல் தலைவர்கள் ஒபாமா, ரீகன், வின்ஸ்டன் சர்ச்சில், பிடல் காஸ்ட்ரோ, மாமன்னர்கள் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன், தொழில் அதிபர் பில்கேட்ஸ் உள்ளிட்டோர் இடதுகை பழக்கம் கொண்டவர்களே.
உங்கள் குழந்தை இடது கைப்பழக்கம் கொண்டிருந்தால், அவர்களும் இவர்களைப்போல தனிப்பெரும் திறமைசாலியாக மிளிரும் வாய்ப்புள்ளது. எனவே இடதுகைப்பழக்கம் பற்றி அடிக்கடி குழந்தையை சீண்டிக் கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் இயல்புக்கு மாறாக இயங்குவதாக எண்ண வேண்டாம்.
இயற்கையே அவர்களுக்கு அந்தத் திறனை வழங்கி உள்ளது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாறாகநாம் அவர்களை வலது கைப் பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பதால் அவர்கள் வேறுவிதமாக பாதிக்கப்படுவார்கள் என்று ஆராய்ச்சி சொல்கிறது.
திறன் பாதிப்படையலாம்
மனதளவில் பாதிக்கப்படும் அவர்கள், முரணான பழக்கத்துக்கு முயற்சிப்பதால் அவர்களின் அறிவுத்திறனும், பேசும் திறனும் பாதிக்கப்படலாம் என்கிறார்கள்
எனவே, என்ன சொன்னாலும் கேட்க மாட்டியா? என்று திட்டுவதும், வலது கையால் எழுது என்று கட்டாயப்படுத்துவதும் வேண்டாம். இடது கைப்பழக்கத்தை கேலி செய்யும் பழக்கத்தை நண்பர்களும், சமூகத்தினரும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் வலது பக்கம் சிறப்பாக செயல்படுவதால் அவர்கள் இடக்கை பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர் என்கிறது ஆய்வு. உலகில் பெரும்பாலான மக்களுக்கு இடது பக்க மூளையே பலம் பெற்றிருப்பதால் அதிகமானவர்கள் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
உலகில் வெறும் 10 முதல் 12 சதவீதம் பேரே இடது கைப்பழக்கம் கொண்ட சிறப்புத் திறன் பெற்ற வர்களாக உள்ள னர்.
பிரச்சினைகள் பல…
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் மேற்சொன்ன பாகுபாடு பிரச்சினைகள் மட்டுமல்லாது, இந்த உலகில் சில வித்தியாசமான பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் உலகின் எந்தத் தயாரிப்பாக இருந்தாலும், பெரும்பாலான பொருட்கள் வலது கைப்பழக்கம் கொண்டவர்களை மய்யப்படுத்தியே தயாரிக்கப்பட்டு இருப்பதால் அதை பயன்படுத்தும்போது இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
உதாரணமாக இன்றைய கணினி உலகில் விசைப்பலகை (கீபோர்டு) மற்றும் மவுஸ் போன்றவை வலது கைப் பழக்கத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருப்பதால் அதை அவர்கள் சிரமத்துடன் பயன்படுத்துவார்கள். இதேபோலத்தான் வாகனங்களிலும் ஸ்டீயரிங், பிரேக் உள்ளிட்ட அமைப்புகள் வலது கைப்பழக்கத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு வந்ததால் அவர்கள் சிரமம் அடைந்தார்கள். அதனால் அவர்கள் அதிகமாக விபத்தில் சிக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபகாலமாக அந்த பிரச்சினைகளையும் தீர்க்கும் விதமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்காக பிரத்யேக மாற்றங்கள் செய்து வாகனங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின. இது மட்டுமல்ல பேனா தொடங்கி, கத்தரிக்கோல், கிடார், கழிவறை குழாய்கள் வரை பல பொருட்கள், கருவிகளை பயன்படுத்தும் இடங்களில் இடது கை பயன்பாட்டாளர்களுக்கான பிரச்சினைகள் உள்ளன. இது போன்ற பிரச்சினைகள் சமீபகாலமாக விழிப்புணர்வு பெற்று, அவர்களுக்கேற்ற வடிவமைப்புகள் வரத் தொடங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
இத்தகைய இடர்பாடுகளைகளையும் விழிப்புணர்வுக்காகவே 1976ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 13ஆம் தேதி இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கான நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான சிறப்பு தயாரிப்புகளையும், அவர்களையும் ஊக்கப்படுத்தி, நாம் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்போது அவர்களது இடதுகை நம் தோள் களை தோழமையுடன் பற்றும். அவர்களும் தன் தனித்திறனால் வெற்றிவாகை சூடுவார்கள்…!
சிந்தனை, கலைத்திறன் அதிகம் இருக்கும்
இடது கை பழக்கம் குறித்து திருச்சியை சேர்ந்த பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் பிரணாவ் கூறியதாவது:-
உலக அளவில் நூற்றில் 10 சதவீத மக்கள் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் Left handedness/Sinistrality என்று கூறுவர். நாம் பிறக்கும்போது இரண்டு கைகளையும் அசைப்போம் விளையாட்டு பொருட்களை இருகரம் கொண்டு தான் பிடிப்போம். வலது அல்லது இடது கை வாகு- இது 3 வயதில் தொடங்கி 10 வயதிற்குள் தீர்மானம் ஆகும். இதனை சில பெற்றோர் இடது கை பழக்கம் இருந்தால் வித்தியாசம், பிற்காலத்தில் பிரச்சினை வரும் என்று சிறுவயதிலேயே மாற்றி விடுவார்கள்.
மூளையில் வழக்கமாக இடது மூளை பாகம் பேச்சு, மொழி சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடும். வலது மூளை பாகம் மிக துல்லியமான உடல் அசைவுகளை திட்டமிடும். இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு அப்படியே மாறும். அதுவும் அவர்களுக்கு சிந்தனை திறன், கலைத் திறன் அதிகம் இருக்கும். இடது கை பழக்கம் உள்ளவர்கள் விளையாட்டில் சிறப்பாக திகழ்வர். இதற்கு காரணம் வலது கை பழக்கம் உடைய பெரும்பாலான வீரர்களுக்கு அவர்களோடு எவ்வாறு விளையாட வேண்டும் என்று சிந்திக்க அவர்களது மூளை கொஞ்சம் தாமதமாகவே செயல்படும். ஏன் சிலருக்கு குழப்பம் கூட ஏற்படும். இதனால் பிரபலமான கிரிக்கெட் போட்டி களில் இடது கை பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு அதிக மவுசு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுக்கும் சங்கம் உண்டு
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் 1990ஆம் ஆண்டு ஒன்றுகூடி ‘இடது கைப்பழக்கம் உடையவர்கள் கிளப்’ என்னும் புதிய சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த அமைப்பு சார்பில் ஆகஸ்டு 13 வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதுடன், விதவிதமான போட்டிகள் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்காக நடத்தப்படுகிறது.