பொதுத்துறை வங்கிகளில் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட) வழங்கப்பட்டு வரும் சேவைகளில் தொழில்நுட்ப ரீதியாக விரைவாக நடைபெறக்கூடிய சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் கடன் கணக்குகளில் பணத்தை கரன்சி நோட்டுகளாகவும் செலுத்தலாம்; காசோலை மூலமாகவும் செலுத்தலாம்; செலுத்தப்படும் காசோலை அதே வங்கியின் இதர கிளைகளில் உள்ள கணக்குகளுக்கு உரியதாக இருந்தால் செலுத்தப்பட்ட அதேநாளில் – ஒரே நேரத்தில் பற்று – வரவு வைக்கப்பட்டு விடும். (பற்று வைப்பதற்கு காசோலைக்குரிய கணக்கில் பணம் இருக்க வேண்டும்!)
செலுத்தப்பட்ட காசோலை வேறு வங்கிக்கு உரியதாக இருந்தால் இன்றைய நிலவரப்படி செலுத்தப்பட்ட நேரத்திலிருந்து 48 மணி நேரத்தில் (இரண்டு வேலை நாள் கால வரையறை) காசோலைக்கு உரிய கணக்கில் பணத்தை பற்று வைத்து, காசோலை செலுத்தப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்படும். இருப்பினும் சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கிணங்க அனுப்பப்படும் குறுஞ்செய்தி (Alert Message) யில் கணக்கில் உள்ள பணத்தின் நிலுவையை இரண்டு விதமாக குறிப்பிடுவார்கள்.
- கணக்கில் உள்ள நிலுவைத் தொகை (இதி்ல் செலுத்தப்பட்ட காசோலைத் தொகையினையும் சேர்த்து குறிப்பிடுவார்கள்)
- மற்றொன்று செலுத்தப்பட்ட காசோலைத் தொகை இல்லாமல் கணக்கில் உள்ள தொகை. இந்தத் தொகை அளவில்தான் அந்நேரத்தில் தேவைப்படும் பணத்தினைப் பெற முடியும்.
பின்னர் செலுத்தப்பட்ட காசோலையின் தொகை செல்லுபடியாகி உண்மையாக (Actual) கணக்கில் ஏற்றப்படும். அதற்குப் பின்பு அந்தத் தொகை குறித்த பண பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர் வணிகப் பெரு மக்களுக்கு காசோலை பெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டு அவர்களுக்கு கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் வரை வணிக பரிவர்த்தன உறுதியில்லா நிலைமை நீடிக்கும் – இந்த உறுதியில்லாத கால அளவில் இப்பொழுது விரைந்து முடித்து வாடிக்கையாளருக்கு சேவை செய்திடும் அறிவிப்பு வெளி வந்துள்ளது. செலுத்தப்படும் காசோலை வேறு வங்கிக் கிளைக்குரியதாக இருந்தால் அங்கிருந்து பற்று வைத்து வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைத்திட 48 மணி ேநரம் ஆகும் என்பதை நாலு மணி நேரமாகக் குறைத்திடும் அறிவிப்பினைச் செய்துள்ளனர்.
இந்த மாற்றத்தினை இரண்டு கட்டங்களாக செயல்படுத்திட ரிசர்வ் வங்கி உத்தர விட்டுள்ளது.
2025 அக்டோபர் 4 ஆம் நாள் முதல் தொடங்கும். முதல் கட்டத்தின் ஒரு முறை கணக்குகளில் வரவு வைத்திட செலுத்தப்படும் காசோலையினர் நிலைமை (காசோலைப் பணம் வரவு நிலை அதற்கான கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திருப்பி அனுப்பப்படும் நிலை) அதே நாள் இரவு 7 மணிக்குள் காசோலைக்கு உரிய வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் காசோலைப் பணம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த முதற்கட்ட செயல்பாட்டுக்கு அடுத்த நிலை 2026 ஜனவரி 2 முதல் நடைமுறையாகும். இதன் மூலம் அனுப்பப்பட்ட காசோலை குறித்து 3 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். சேவை வழங்கிடும் (Transaction) நேரம் 1 மணி நேரம்; ஆக மொத்தம் 4 மணி நேரத்தில் காசோலைப் பணம் செலுத்துபவர் கணக்கில் வரவு வைக்கப்படும்; இல்லையென்றால் காசோலை திரும்பிய நிலை குறித்து வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஒட்டு மொத்தமாக இது வரை 48 மணி நேரத்தில் நிறைவு பெறும் பணி இந்த காலக் கட்டங்களுக்குப் பிறகு 4 மணி நேரத்தில் முடிந்து விடும்.
CTS (Cheque Fruncarim System) என்று நடைமுறையில் உள்ள முறை தொழில் நுட்ப அடிப்படையில் (Transaction) விரைந்து செயல்பட ரிசர்வ் வங்கியிலிருந்து அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.